தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கைக்கான செயலியை அக்கட்சியின் தலைவர் விஜய் நாளை வெளியிடவுள்ளார்.
தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தங்களது வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் முதன் முதலாக தேர்தலை சந்திக்கவுள்ள விஜய்யின் தவெகவும் அரசியல் பணிகளை முழு வீச்சில் செய்து வருகிறது. அந்த வகையில், ஆகஸ்ட் மாதம் தவெக கட்சியின் இரண்டாவது மாநில மாநாடு நடைபெறவுள்ளது.
முன்னதாக தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய செயலி ஒன்று அறிமுகம் செய்யப்பட்டது. 2 கோடி உறுப்பினர்களை தமிழக வெற்றி கழகத்தில் சேர்க்க வேண்டும் என கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்த நிலையில், ஒன்றரை கோடிக்கும் அதிகமானவர்கள் கட்சியில் இணைந்தனர். இதனை தொடர்ந்து கட்சி நிர்வாகிகளின் செயல்பாடுகளை கண்காணிக்க தவெக தலைவர் விஜய் தலைமையில் வாட்ஸ் அப் குழு உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
தவெக உறுப்பினர் சேர்க்கை செயலியை நாளை அக்கட்சி தலைவர் விஜய் அறிமுகப்படுத்துகிறார். பனையூர் தலைமை அலுவலகத்தில் நாளை நடைபெறவுள்ள மாவட்ட செயலாளர்கள் மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள் கூட்டத்தில் செயலியை வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.