மதுரையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய் இணைந்துள்ளது போன்ற போஸ்டர்கள் சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் விவாதத்தை கிளப்பிய நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக தமிழக வெற்றிக் கழகத்தினர் செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் புதிய போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரையைச் சேர்ந்த ஓர் அதிமுக நிர்வாகி ஒட்டிய போஸ்டரில், எடப்பாடி பழனிசாமியும் விஜய்யும் தோள் மேல் கை போட்டபடி இருக்கும் படத்துடன், “2026-ல் சிவனும் சக்தியும் சேர்ந்தால் மாசுடா…! எதிர்த்து நின்றவன் எவனும் தூசுடா…!” என்ற வாசகம் இடம்பெற்றிருந்தது. இந்த போஸ்டர் அதிமுக மற்றும் தவெக இடையே கூட்டணி அமையலாம் என்ற யூகங்களை ஏற்படுத்தியது.
இந்த யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, செங்கல்பட்டு மாவட்ட தமிழக வெற்றிக் கழகத்தினர், “தமிழக மக்கள் எங்களோடு துணை இருக்க, பாசிசமும் வேண்டாம், பாயாசமும் வேண்டாம்” என்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டர்களை செங்கல்பட்டு நகர் முழுவதும் ஒட்டி வருகின்றனர். இதன் மூலம், அதிமுகவுடன் கூட்டணி இல்லை என்பதை தவெக வெளிப்படையாக அறிவித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.