திருச்சி பிரச்சாரத்தில் 10.30 மணியில் இருந்து அரை மணி நேரம் மட்டுமே பேச அனுமதி அளித்த நிலையில், இதுவரை விஜய் பேசாததால் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
மதுரை மாநாட்டை தொடர்ந்து திருச்சியில் தவெக தலைவர் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டது. திருச்சி சமத்துவபுரம் பேருந்து நிலையம் உள்ளிட்ட இரண்டு இடங்களில் பிரச்சாரம் மேற்கொள்ள அனுமதி கேட்டும் போலீசார் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டு இறுதியாக மரக்கடை பகுதியில் பிரச்சாரம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது.
23 நிபந்தனைகளுடன் காலை 10.30 மணியில் இருந்து 11 மணி வரை மட்டுமே விஜய் பேச வேண்டும் என காவ்லதுறை தரப்பில் அனுமதி கொடுக்கப்பட்டது. அதன்படி இன்று காலை சென்னையில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் புறப்பட்ட விஜய், அங்கிருந்து பிரச்சாரம் நடைபெறும் மரக்கடை பகுதிக்கு காரில் புறப்பட்டு செல்கிறார்.
வழிநெடுகிலும் ஏராளமான பொதுமக்களும், தொண்டர்களும் விஜய்யை காண குவிந்ததால் திருச்சி மாநகரமே ஸ்தமிக்கும் நிலை ஏற்பட்டது. இதில் கூட்ட நெரிசலில் சிக்கி சிலர் மயக்கமடைந்ததால் அவரசமாக சிகிச்சை அளிக்கப்பட்டது. வழிநெடுகிலும் திரண்டிருந்த மக்கள் கூட்டத்தில் விஜய்யின் வாகனம் ஊர்ந்து சென்றதால் ஒரு மணி வரை அவரால் பிரச்சாரம் நடைபெரும் இடத்திற்கு செல்ல முடியவில்லை.
மக்கள் மத்தியில் பேச காலை 10.30 மணிக்கு மட்டுமே அனுமதி அளித்திருந்த நிலையில், ஒரு மணி வரை விஜய் பேசாததால், அவர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை அதாவது வழக்குப்பதி செய்யப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.