“அதிமுகவின் மூத்த தலைவர்கள் கூட பாஜகவிடம் எந்தக் கட்சியில் சேரலாம் என அனுமதி வாங்கிவிட்டுதான் சேர்கிறார்கள்” என ஈரோட்டில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், ஈரோடு மாவட்டம் எழுமாத்தூரில் புதிய திராவிட கழகம் சார்பில் நடைபெற்ற ‘வெல்லட்டும் சமூகநீதி’ மாநாட்டில் பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் பேசும்போது, “ஈரோட்டில் இருந்து வெளியான ‘குடியரசு’ இதழில்தான் அண்ணா, கலைஞர் போன்றோர் பயிற்சி பெற்றார்கள். அந்தப் பயிற்சியின் மூலம் தமிழ்நாட்டில் அனைத்து சமுதாயத்திற்கும் சமூகநீதியின் வெளிச்சம் ஏற்பட்டுள்ளது” என்று பெருமிதம் தெரிவித்தார்.
திராவிடம் என்ற சொல்லைக் கேட்டாலே டெல்லியிலிருந்து உருட்டலும், மிரட்டலும் வருவதாகவும், லோக்கலில் இருக்கும் சங்கிகள் சிலரால் அவதூறுகளும், வன்மமும் பரப்பப்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
கலைஞரின் வரையறையை மேற்கோள் காட்டி, “மொழியால் தமிழர்கள், இனத்தால் திராவிடர்கள், நாட்டினால் இந்தியர்கள்” என திமுகவின் நிலைப்பாட்டைத் தெரிவித்தார்.
“திராவிடம் என்ற சொல் பெரியார், கலைஞர் ஆகியோரால் கண்டுபிடிக்கப்பட்டது அல்ல; 1856-இல் கால்டுவெல் அவர்களாலேயே அது சுட்டிக்காட்டப்பட்டது” என்று ஆய்வுகள் உள்ளதைச் சுட்டிக்காட்டினார்.
“தெளிவான ஆய்வுகள் இருந்தும், சில ‘சங்கிகள்’ திராவிடத்தின் மீது களங்கத்தைக் கற்பிக்கிறார்கள், குழப்பத்தை ஏற்படுத்துகிறார்கள். முன்பு உள்ளூர் சங்கிகள் செய்த வேலையை இப்போது ஆளுநரே செய்கிறார்.” என்றார்.
ஆளுநர் ‘திராவிடம்’ என்ற சொல்லை கொச்சைப்படுத்தியது குறித்த கேள்விக்கு, எடப்பாடி பழனிசாமி தன்னிடம் பதில் கேட்கக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
“எடப்பாடி பழனிசாமி, அதிமுகவின் பெயரில் உள்ள ‘திராவிடம்’ என்ற சொல்லை விட்டுக்கொடுத்துவிட்டார். அந்தப் பெயரையே அவர் மறந்துவிட்டார். எம்.ஜி.ஆர், பெரியார் போன்றோரையும் மறந்துவிட்டார். தற்போது எடப்பாடி பழனிசாமியின் மனதில் நிறைந்து இருப்பவர் அமித்ஷா மட்டுமே.”
“அதிமுகவில், அமித்ஷாவிற்கு சிறந்த அடிமை யார் என்பதில் போட்டி உள்ளது. எடப்பாடி எட்டு அடி பாய்ந்தால், மற்றவர்கள் பதினாறு அடி பாயத் தயாராக உள்ளனர். குறிப்பாக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் மாற்றுக்கட்சியில் சேர்ந்ததற்குக் காரணம் டெல்லியின் ஆலோசனைதான் என்றும், யார் எந்தக் கட்சியில் சேர வேண்டும் என முடிவு செய்வது டெல்லி தலைமைதான். அதிமுகவினருக்கு டெல்லியில் உள்ள அமித்ஷா வீடு தான் தலைமை அலுவலகம் (Head Office) என்றும் துணை முதல்வர் விமர்சித்தார்.
“தற்போது யாரும் கட்சி மாறவில்லை. அவர்கள் கட்சி மாறவில்லை, ‘கிளை’ (Branch) தான் மாறி உள்ளார்கள்” என்று கிண்டல் செய்தார். பாஜகவின் அரசியல் நடவடிக்கைகள் குறித்துப் பேசிய அவர், “யார் வந்தாலும் திமுகவின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது. பாஜக முன்னேறியவர்களை பின்னோக்கித் தள்ளுகிறது.” என்றார்.
திமுகவிற்கு வாக்களிக்கும் பிற்பட்டோர், மிகவும் பிற்பட்டோர் மற்றும் ஒதுக்கப்பட்ட சமூகங்களின் வாக்குகளைப் பறிக்கவே பாஜக முயற்சிப்பதாகவும், அவர்களின் ஓட்டுகளைப் பாதுகாப்பது திமுகதான் என்றும் அவர் உறுதிபடத் தெரிவித்தார்.
Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version