அமித்ஷா திராவிட முன்னேற்ற கழகமாக ”அதிமுக” மாறி விட்டதாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
சென்னை, புது வண்ணாரப்பேட்டை திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் திமுக சார்பில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது.
ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினர் ஜே.ஜே.எபினேசர் தலைமையில் நடந்த விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:
கிறிஸ்துவ கொள்கையும், திராவிட கொள்கையும் ஒன்று தான். திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் முதல் கையெழுத்து மகளிருக்காக போடப்பட்டது. இதில் மகளிர் உரிமை திட்டத்தின் மூலம் ரூ.1 கோடியே 30 லட்சம் மகளிர் பயன்பெற்று வருகின்றனர். 2 ஆவது கையழுத்தாக போடப்பட்ட பள்ளிகளில் காலை உணவு திட்டம் மூலம் 22 லட்சம் குழந்தைகள் பயன்பெற்று வருகின்றனர்.
அரசு பள்ளியில் படித்து கல்லூரியில் சேரும் மாணவ, மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் திட்டம், இல்லம் தேடி கல்வி, மக்களை தேடி மருத்துவம் என பல்வேறு திட்டங்களை நாள்தோறும் முதல்வர் செயல்படுத்தி வருகிறார். மேலும் சிறுபான்மை மக்களுக்கும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கல்வி பயில்வோருக்கு ஊக்கத்தொகையாக ரூ.7 கோடி கொடுக்கப்பட்டுள்ளது.
புதிய கல்வி கொள்கை மூலம் மீண்டும் இந்தியை திணிக்க முயற்சிக்கும் பாஜகவின் திட்டத்தை முறியடித்து கல்வி கொள்கையை ஏற்க மாட்டோம் என்பதில் முதல்வர் உறுதியாக உள்ளார். கல்வி கொள்கையை ஏற்றால் தான் நிதி தருவோம் என ஒன்றிய கல்வியமைச்சர் தர்மேந்திர பிதான் கூறிய நிலையில் கல்வி கொள்கையை ஏற்க மாட்டோம்.
அதனை ஏற்பதற்கு எவ்வளவு நிதி தந்தாலும் வேண்டாம் என உறுதியாக முதல்வர் போராடி வருகிறார். பாஜக அரசு கொண்டு வரும் மக்களுக்கு எதிரான திட்டங்களுக்கு எதிராக முதலாவது குரல் கொடுத்து எதிர்க்கும் முதல்வராக தமிழக முதல்வர் இருந்து வருகிறார். ஒவ்வொரு திட்டம் தொடர்பாக தமிழக முதல்வர் எடுக்கும் நடவடிக்கையை மற்ற மாநில முதல்வர்கள் எதிர்பார்த்து நடவடிக்கை எடுக்கும் நிலை உள்ளது.
நாடாளுமன்ற தொகுதியை குறைக்க மேற்கொள்ளப்பட்ட பாஜகவின் திட்டம் மற்றும் தற்போது கொண்டு வரப்பட்ட எஸ்ஐஆருக்கு எதிராக முதன் முதலாக குரல் கொடுத்தது முதல்வர் தான். எஸ்ஐஆர் பணியை குறைவான காலத்தில் செய்து முடிக்க முடியாது என முதல்வர் கூறினார். பீகார் தேர்தலின் போது பெரும்பான்மையான சிறுபான்மை மக்களின் வாக்குகள் நீக்கப்பட்டன. அதுபோன்ற திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்த முடியாது. இங்கு வந்திருக்கும் அனைவரும் தங்களுடைய வாக்குகள் இருக்கிறதா? என சோதனை செய்து உறுதிப்படுத்தி கொள்ளுங்கள்.
வாக்கு இல்லை என்றால் திமுகவின் பிஎல்ஏ அதிகாரிகள் மூலம் விண்ணப்பித்து வாக்குகளை உறுதி செய்து கொள்ளுங்கள். பீகாரில் இருந்து ஒன்றிய அமைச்சர் அமித்ஷா பீகாரை வென்றுவிட்டோம். அடுத்த குறி தமிழகம் என்று கூறியுள்ளார். அமித்ஷாவின் திட்டத்தை தமிழக மக்களுடன் கூட்டணி அமைத்துள்ள திராவிட முன்னேற்ற கழகம் தோற்கடிக்கும்.

பாஜகவிற்கு அடிமையாக இருக்கும் இயக்கமாக அதிமுக மாறிவிட்டது. அதிமுகவை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றம் கழகம் என்று அழைப்பதை விட அமித்ஷா திராவிட முன்னேற்ற கழகம் என அழைப்பதே சரியாக இருக்கும்.
பழைய அடிமைகளோடு தற்போது புதிய அடிமைகளும் சேர்ந்துள்ளனர். 2026 இல் நடைபெற உள்ள தேர்தலில் தலைவர் கூறியது போல 200 மேற்பட்ட தொகுதிகளில் வெற்றியை நீங்கள் உறுதி செய்து தர வேண்டும். மேலும் ஆர்கே நகர் தொகுதியிலும் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வெற்றியை நீங்கள் உறுதி செய்து தர வேண்டும்.
இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
