கவுகாத்தி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதல் நாள் ஆட்டநேர முடிவில் தென்னாப்பிரிக்கா அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 247 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்கா அணி, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கிறது. கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்க அணி தொடரில் முன்னிலை வகிக்கிறது.
இந்தநிலையில், 2வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி, அசாம் மாநிலம் கவுகாத்தி நகரில் உள்ள பர்சாபரா மைதானத்தில் இன்று (நவ. 22) தொடங்கி உள்ளது. டாஸ் வென்ற தென்னாப்ரிக்கா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து, துவக்க வீரர்களாக களமிறங்கிய மார்க்ரம், ரிக்கெல்டன் சிறப்பான துவக்கத்தை அமைத்து கொடுத்தனர். அந்த அணியின் ஸ்கோர் 82 ரன்னாக இருந்த போது, மார்க்ரம் 38 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து வந்த ரிக்கெல்டன் 35 ரன்களும், ஸ்டப்ஸ் 49 ரன்களும், பவுமா 41 ரன்களும் என தங்களின் பங்களிப்பை வழங்கினர்.
முதல்நாள் ஆட்ட நேர முடிவில் தென்னாப்ரிக்கா அணி 6 விக்கெட் இழப்பிற்கு 247 ரன்கள் எடுத்துள்ளது. சேனுரன் முத்துசாமி 25 ரன்களுடனும், கயில் 1 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டும், பும்ரா, சிராஜ், ஜடேஜா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றி உள்ளனர்.
