ஐபிஎல் தொடரில் 10 அணிகளின் கேப்டன்களும் அறிவிக்கப்பட்டு, 2026 சீசன் நாளை (மார்ச் 28) தொடங்கவுள்ள நிலையில், சமூக வலைதளங்களில் ஒரு சுவாரஸ்யமான விவாதம் சூடுபிடித்துள்ளது. இந்திய டி20 அணியில் நிரந்தர இடம்பிடிக்கப் போராடும் வீரர்கள் பலர், ஐபிஎல் அணிகளில் கேப்டன்களாக இருப்பதுதான் இந்த விவாதத்திற்கு முக்கிய காரணம். குறிப்பாக, சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், ஆர்சிபி-யின் ரஜத் படிதார், பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் போன்ற முன்னணி வீரர்கள் சமீபத்திய இந்திய டி20 உலகக்கோப்பை (2026) மற்றும் சர்வதேச போட்டிகளில் தொடர்ந்து இடம்பெறாதது ரசிகர்களிடையே கேள்விகளை எழுப்பியுள்ளது.
பிசிசிஐ-யைப் பொறுத்தவரை, ஐபிஎல் கேப்டன்சி என்பது ஒரு வீரரின் தலைமைப் பண்பு மற்றும் உள்ளூர் அனுபவத்தைக் குறிப்பதாகவே பார்க்கப்படுகிறது. ஆனால், இந்திய டி20 அணிக்கு வீரர்களைத் தேர்வு செய்யும்போது தற்போதைய ஃபார்ம், ஸ்டிரைக் ரேட் மற்றும் அணியின் காம்பினேஷன் ஆகியவற்றைத் தேர்வுக்குழு முன்னிறுத்துகிறது. உதாரணத்திற்கு, சூர்யகுமார் யாதவ், அபிஷேக் சர்மா போன்ற ‘அக்ரசிவ்’ பேட்டர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதால், நிலைத்து நின்று ஆடும் பாணி கொண்ட ருதுராஜ் அல்லது ஸ்ரேயஸ் போன்றவர்களுக்கு இடம் கிடைப்பதில் சிக்கல் நீடிக்கிறது. இதுவே 7 கேப்டன்கள் இந்திய அணியில் இல்லாத சூழலுக்குக் காரணமாக அமைகிறது.
இருப்பினும், இந்த ஐபிஎல் சீசன் இந்த கேப்டன்களுக்கு ஒரு மிகப்பெரிய அக்னிப்பரீட்சையாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ரிஷப் பண்ட், ஷுப்மன் கில் போன்றவர்கள் அணியில் இடம் பெற்றிருந்தாலும், ரகானே, ரியான் பராக், படிதார் போன்றவர்கள் தங்கள் பேட்டிங் திறமையால் பிசிசிஐ-யின் கவனத்தை மீண்டும் ஈர்க்க முயல்வார்கள். “ஐபிஎல்-ல் ஒரு அணியையே வழிநடத்தும் தகுதி கொண்டவர்களுக்கு இந்திய அணியில் ஏன் இடமில்லை?” என்ற ரசிகர்களின் குமுறல், இந்த சீசனில் இவர்கள் காட்டும் அதிரடி ஆட்டத்தின் மூலம் முடிவுக்கு வருமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
