ஐபிஎல் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் ஒரு மிகப்பெரிய வணிக ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகியுள்ளது. ஐபிஎல் தொடரின் முதல் சீசன் சாம்பியனான ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணியை, அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் கல் சோமானி (Kal Somani) தலைமையிலான முதலீட்டாளர்கள் கூட்டமைப்பு சுமார் ரூ.15,290 கோடிக்கு (1.63 பில்லியன் டாலர்) வாங்கியுள்ளது. இந்த அதிரடி ஒப்பந்தத்தின் மூலம், உலகிலேயே மிகவும் மதிப்புமிக்க கிரிக்கெட் கிளப்பாக ராஜஸ்தான் ராயல்ஸ் உருவெடுத்துள்ளது. இந்த முதலீட்டாளர் குழுவில் வால்மார்ட் குடும்பத்தைச் சேர்ந்த ரோப் வால்டன் மற்றும் என்.எஃப்.எல் (NFL) அணியின் உரிமையாளர்களான ஹாம்ப் குடும்பத்தினரும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
2026 ஐபிஎல் தொடர் முழுவதும் பழைய நிர்வாகத்தின் கீழேயே அணி செயல்படும். இருப்பினும், இந்த சீசன் முடிவடைந்ததும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் முழுமையான உரிமம் மற்றும் நிர்வாகப் பொறுப்புகள் கல் சோமானி தலைமையிலான புதிய குழுவிடம் முறைப்படி ஒப்படைக்கப்படும். ஏற்கனவே இந்த அணியில் சிறுபான்மை பங்குகளை வைத்திருந்த கல் சோமானி, தற்போது 100 சதவீத உரிமையையும் வாங்கியுள்ளது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாகியுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த விற்பனை ஐபிஎல் அணிகளின் மதிப்பீட்டை புதிய உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பங்குகளை விற்கும் பேச்சுவார்த்தைகள் நடந்து வந்த நிலையில், தற்போது இவ்வளவு பிரம்மாண்டமான தொகைக்கு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இது மற்ற ஐபிஎல் அணிகளின் சந்தை மதிப்பையும் உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய உரிமையாளர்களின் வருகையால் அடுத்த சீசனில் அணியின் கட்டமைப்பு, பயிற்சி முறைகள் மற்றும் வீரர்களின் தேர்வில் பெரும் மாற்றங்கள் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
