2027 ஒருநாள் உலகக் கோப்பையில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி விளையாடுவது குறித்த விமர்சனங்களுக்கு எம்.எஸ். தோனி பதிலடி கொடுத்துள்ளார்.
அடுத்த ஒருநாள் உலகக் கோப்பையில் ரோஹித் மற்றும் கோலியின் பங்கேற்பு குறித்து தொடர்ச்சியாக விவாதிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு, இருவரும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றதாக அறிவித்தது, பல்வேறு யூகங்களுக்கு வழிவகுத்தது.
2027 உலகக் கோப்பைக்கு ‘ஹிட்மேன்’ மற்றும் ‘கிங் கோலி’யின் வயதும் ஒரு முக்கிய காரணியாகக் கருதப்படுகிறது. இருப்பினும், அவர்களின் பங்கேற்பில் வயது ஒரு பொருட்டல்ல என்றும், மாறாக அவர்களின் உடற்தகுதி மற்றும் செயல்பாடுதான் நேரடியாகத் தொடர்புடையதாக இருக்கும் என்றும் தோனி தெளிவாகக் கூறியுள்ளார். சமீபத்தில் ஒரு நிகழ்வின்போது, தோனியிடம் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி குறித்து ஒரு கேள்வி எழுப்பப்பட்டது.
https://x.com/itzyash07/status/2018896769191747741?
அப்போது பேசிய தோனி, “ஏன் விளையாடக்கூடாது? ஒருவர் அடுத்த ஒருநாள் உலகக் கோப்பையில் ஏன் விளையாட வேண்டும் என்பதே முக்கிய கேள்வி. என்னைப் பொறுத்தவரை, வயது ஒரு அளவுகோல் அல்ல. ஆட்டத்திறனும் உடல் தகுதியுமே அளவுகோல்கள்.”
வயது குறித்து மேலும் பேசிய தோனி, “வயது ஒரு காரணியா? இல்லை. உடல் தகுதி ஒரு காரணியா? ஆம். உங்களுக்கு 22 வயதாக இருந்து, நீங்கள் உடல் தகுதியுடன் இல்லையென்றால், உங்களால் சர்வதேச கிரிக்கெட் விளையாட முடியாது. அவர் தொடர்ந்து சிறப்பாகச் செயல்பட்டு, நாட்டிற்காகச் சிறப்பாகச் செய்ய வேண்டும் என்ற விருப்பம் அவரிடம் இருந்தால், ஏன் கூடாது? இதைத் தவிர, அனுபவம் வாய்ந்த வீரர்களை நீங்கள் எப்படி அணிக்குள் கொண்டு வருவீர்கள்?” என்றார்.
அணிக்கு அனுபவமிக்க வீரர்கள் அவசியம் என்றும் தோனி வலியுறுத்தினார். இதுகுறித்து பேசிய அவர், “சச்சின் டெண்டுல்கர் மாதிரியானவர் அல்லாமல், 20 ஆண்டுகள் அனுபவம் கொண்ட ஒருவரை திடீரென அணியில் கொண்டு வர முடியாது. யார் சிறப்பாக விளையாடுகிறார்களோ அவர்கள் அணியில் தொடர்வார்கள்; இல்லையெனில் அவர்கள் தொடர முடியாது. உடல் தகுதி இல்லையெனில் அவர்களை நீக்கலாம்” என்று தெரிவித்தார்.
மேலும், பல ஆண்டுகளாக அதிக அழுத்தமுள்ள போட்டிகளில் விளையாடுவதன் மூலமே அனுபவம் கிடைக்கிறது என்றும் தோனி கூறினார். ரோகித், விராட் அல்லது எதிர்காலத்தில் வரப்போகும் எந்த வீரராக இருந்தாலும், அவர்கள் 30 வயதை கடந்துவிட்டார்கள் என்பதற்காக அவர்கள் விளையாடலாமா வேண்டாமா என்பதை நாம் முடிவு செய்யக்கூடாது. அதை முடிவு செய்ய வேண்டியது அவர்கள் தான். அவர்கள் தொடர்ந்து ரன் குவித்தால், அணியின் வெற்றிக்கு பங்காற்றினால், நிச்சயம் அவர்கள் அடுத்த உலக கோப்பையில் விளையாடலாம்,” என்று தெரிவித்துள்ளார்.
