ஆமதாபாத்தில் ஏர் இந்தியா விமான விபத்தில் இதுவரை 274 பேர் உயிரிழந்திருக்கும் நிலையில், இனி ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்ய மாட்டேன் என கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார்.
கடந்த 12-ம் தேதி ஆமதாபாத் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஏர் இந்தியா விமானம் ஒன்று 230 பயணிகள் உட்பட 242 பேருடன் லண்டன் நோக்கி புறப்பட்டது. ஓடுபாதையில் இருந்து மேல் எழும்பிய சில நிமிடங்களிலேயே அந்த விமானம் கட்டுப்பாட்டை இழந்துள்ளது. விமானி அவசரகால அழைப்பை விடுத்ததுடன், மேகனிநகர் பகுதியில் இருந்த குதிரை பந்தைய மைதானத்தில் விமானத்தை நிறுத்த முற்பட்டுள்ளார். அதற்குள் கட்டுப்பாட்டை இழந்த விமானம், அப்பகுதியில் இருந்த பி.ஜே மருத்துவக் கல்லூரி விடுதி கட்டடத்தில் விழுந்து, வெடித்து சிதறியது.
இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 241 பேர் உட்பட விடுதிக் கட்டடத்தில் இருந்த மருத்துவ மாணவர்கள், மருத்துவக் கல்லூரி வளாகத்தில் இருந்தவர்கள் என மொத்தம் 274 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய இந்தியரான விஸ்வாஸ் குமார் ரமேஷ், காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். நாடு முழுவதும் மட்டுமில்லாது உலகம் முழுவதும் இச்சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் இது குறித்து தனது இஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர், ஏர் இந்தியாவின் முன்னாள் பணியாளர் எனக் கூறப்படுபவரின் பதிவின் ஸ்கிரீன்ஷாட்டைப் பகிர்ந்து, ”இனி எப்போதும் ஏர் இந்தியா விமானத்தில் பயணிக்க மாட்டேன்” என பதிவிட்டுள்ளார். டேவிட் வார்னரின் இந்தப் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.