இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20ஐ தொடரின் நான்காவது போட்டி இன்று லக்னோவில் உள்ள எகானா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்திய அணி தொடரில் 2-1 என முன்னிலை வகிக்கிறது. முதல் போட்டியில், இந்திய அணி 101 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது, இரண்டாவது போட்டியில் 51 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்றது, ஆனால் மூன்றாவது போட்டியில் இந்திய அணி மீண்டும் தங்கள் திறமையை வெளிப்படுத்தி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இந்தநிலையில் இன்று 4வது டி20 போட்டி நடைபெறுகிறது. லக்னோவில் மூடுபனி காரணமாக டாஸ் போடுவது தாமதமாகியுள்ளது.
மாலை 6:30 மணிக்கு திட்டமிடப்பட்டிருந்த டாஸ் மூடுபனி காரணமாக தாமதமானது. நடுவர்கள் ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும் ஒரு முறை மைதானத்தை ஆய்வு செய்து கொண்டிருந்தனர், ஆனால் நிலைமை மாறவில்லை. இந்தநிலையில், போட்டி ரத்து செய்யப்பட்டால், இந்திய அணிக்கு சாதமாக வாய்ப்பு அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது.
அதாவது, நான்காவது டி20 போட்டி ரத்து செய்யப்பட்டால், இந்திய அணி டி20 தொடரை இழக்கும் ஆபத்து நீங்கிவிடும். அப்படிப்பட்ட நிலையில், கடைசிப் போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி பெற்றாலும், அவர்களால் தொடரை சமன் மட்டுமே செய்ய முடியும்.
லக்னோவில் உள்ள பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் இந்திய அணி மொத்தம் மூன்று டி20 சர்வதேசப் போட்டிகளில் விளையாடி, அனைத்திலும் வெற்றி பெற்றுள்ளது. ஆப்கானிஸ்தானும் இங்கு மூன்று போட்டிகளை நடத்தியுள்ளது. இதன் மூலம், இங்கு மொத்தம் ஆறு டி20 சர்வதேசப் போட்டிகள் நடைபெற்றுள்ளன, அவற்றில் இரண்டாவதாக பேட்டிங் செய்த அணி ஒருமுறை மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
