ஐபிஎல் மற்றும் உலகக்கோப்பை வெற்றிகளுக்குப் பிறகு, இந்திய கிரிக்கெட் உலகின் இரண்டு துருவங்களாகக் கருதப்படும் எம்.எஸ். தோனி மற்றும் கவுதம் கம்பீர் இடையேயான இன்ஸ்டாகிராம் உரையாடல் தற்போது இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.
டி20 உலகக்கோப்பையை இந்திய அணி வென்றதைத் தொடர்ந்து, முன்னாள் கேப்டன் தோனி இந்திய அணியையும் அதன் பயிற்சியாளர் கம்பீரையும் பாராட்டி ஒரு பதிவைப் போட்டிருந்தார். அதில் கம்பீரின் எப்போதுமே சீரியஸாக இருக்கும் குணத்தைக் கிண்டல் செய்யும் விதமாக ஒரு சுவாரசியமான கருத்தைப் பகிர்ந்திருந்தார்.
அந்தப் பதிவில் தோனி, “கோச் சாப் (Coach Saab)… உங்கள் முகத்தில் இருக்கும் இந்தப் புன்னகை மிகவும் அழகாக இருக்கிறது. உங்களின் வழக்கமான சீரியஸ் முகத்துடன் இந்தச் சிரிப்பும் சேர்ந்தால் அது ஒரு ‘கில்லர் காம்போ’ (Killer Combo) ஆக இருக்கும்” என்று குறிப்பிட்டிருந்தார். களத்தில் எப்போதும் ஆக்ரோஷமாகவும், சீரியஸாகவும் காணப்படும் கம்பீரை, தோனி இப்படி ஜாலியாகக் கலாய்த்தது ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. இத்தனை காலமும் இவர்களுக்குள் மோதல் இருப்பதாகப் பேசப்பட்ட வதந்திகளுக்கு இந்த ஒரு ‘ஃபன் சாட்’ முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
தோனியின் இந்தப் பாராட்டுக்கு கம்பீரும் மிகவும் நெகிழ்ச்சியுடன் பதிலளித்துள்ளார். “நிச்சயமாக, சிரிப்பதற்கு இது ஒரு மிகச்சிறந்த காரணம் (உலகக்கோப்பை வெற்றி). உங்களைப் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி” என்று கம்பீர் பதில் பதிவிட்டுள்ளார். 2007 மற்றும் 2011 உலகக்கோப்பை வெற்றிகளில் முக்கியப் பங்காற்றிய இந்த இரண்டு ஜாம்பவான்களும் சமூக வலைதளங்களில் இப்படி வெளிப்படையாக உரையாடிக்கொண்டது கிரிக்கெட் ரசிகர்களுக்குப் பெரிய விருந்தாக அமைந்துள்ளது. இந்த ‘கில்லர் காம்போ’ உரையாடல் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ட்ரெண்டிங்கில் உள்ளது.
