அனைத்து வடிவ கிரிக்கெட் விளையாட்டுகளில் இருந்தும் ஓய்வுபெறுவதாக இந்திய ஆல் ரவுண்டர் கிருஷ்ணப்பா கவுதம் அறிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணிக்காக ஒரே ஒரு ஒருநாள் போட்டியில் மட்டுமே விளையாடிய ஆல்ரவுண்டர் கிருஷ்ணப்பா கவுதம். கர்நாடகாவைச் சேர்ந்த கவுதம், 2017ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால் அந்த தொடரில் அவருக்கு எந்தவொரு போட்டியிலும் விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை. மேலும் அந்த தொடருடன் அவர் அணியில் இருந்தும் நீக்கப்பட்டார்.
பின்னர் கடந்த 2018ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஏலத்தில் எடுக்கப்பட்டார். அந்த தொடரில் அவர் 15 போட்டிகளில் விளையாடி 126 ரன்களையும், 11 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். இருப்பினும் அவரது பேட்டிங் ஸ்டிரைக் ரேட் 196.87ஆகவும், பவுலிங் எகானமி 7.80 ஆகவும் இருந்ததால், அதே ஆண்டு இந்திய பி அணிக்காக விளையாடும் வாய்ப்பை பெற்றார்.
ஆனால் அடுத்த சீசனில் அவர் 7 போட்டிகளில் விளையாடி 11 ரன்கள் மற்றும் ஒரு விக்கெட்டை மட்டுமே எடுத்திருந்தார். இதனால் அவர் அத்தொடருடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து நீக்கப்பட்டார். இருப்பினும் கர்நாடகா பிரீமியர் லீக் தொடரில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய கவுதம், ஒரு ஆட்டத்தில் 56 பந்துகளில் 134 ரன்களையும், பவுலிங்கி 15 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளையும் கைப்பற்றி மிரட்டி இருந்தார்.
இதனையடுத்து 2020ஆம் ஆண்டு ஐபிஎல் வீரர்கள் ஏலத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி கவுதமை ஏலத்தில் எடுத்தது. ஆனால் அங்கு அவருக்கு போதிய வாய்ப்புகளானது வழங்கப்படவில்லை. பின்னர் நடைபெற்ற 2021ஆம் ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடும் போட்டிக்கு பிறகு ரூ.9.25 கோடி என்ற தொகைக்கு கிருஷ்ணப்பா கவுதமை ஏலத்தில் எடுத்தது. ஆனால் அந்த சீசனிலும் அவர் ஒரு போட்டியில் கூட விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை.
இதற்கு மத்தியில் 2021ஆம் ஆண்டு நடைபெற்ற இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் இந்திய அணியிலும் வாய்ப்பு பெற்றார். அந்த தொடரின் மூலம் சர்வதேச கிரிக்கெட்டிற்கு அறிமுகமான கவுதம், ஒரே ஒரு போட்டியில் மட்டும் விளையாடும் வாய்ப்பை பெற்றிருந்தார். ஆனால் அந்த போட்டியில் அவர் ஒரு ரன் மற்றும் ஒரு விக்கெட்டை மட்டுமே கைப்பற்றி இருந்தார். இதனால் அடுத்த தொடரிலேயே அவர் இந்திய அணியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
பின்னர் 2022ஆம் ஆண்டு முதல் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக ரூ.90 லட்சத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார். கிட்டத்திட்ட மூன்று சீசன்கள் அவர் லக்னோ அணிக்காக விளையாடிய நிலையில், அதில் 12 போட்டிகளில் மட்டுமே விளையாடி 61 ரன்களையும், 8 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். இதன் காரணமாக 2025ஆம் ஆண்டு வீரர்களுக்கான ஏலத்தில் அவரை ஏலம் எடுக்க எந்த அணியும் முன்வரவில்லை.
இதுபோன்ற சூழ்நிலையில் தான கிருஷ்ணப்பா கவுதம், அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கத்தின் (KSCA) சிறப்பு செய்தியாளர் சந்திப்பின் போது அவர் தனது ஓய்வு முடிவை அறிவித்தார். இதனையடுத்து கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ள கிருஷ்ணப்பா கவுதமிற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
