நான்கு நாடுகளுக்கான மகளிர் ஹாக்கி தொடரில் இந்திய அணி, சிலி அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றுள்ளது.
ஜூனியர் மகளிர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டிகள் டிசம்பர் மாதம் நடைபெற உள்ள நிலையில், அதற்கு தயாராகும் விதமாக இந்திய மகளிர் அணி இந்த நான்கு நாடுகள் ஹாக்கி தொடரில் விளையாடி வருகிறது. அர்ஜெண்டினா, உருகுவே, சிலி மற்றும் இந்தியா ஆகிய நான்கு நாடுகள் பங்கேற்கும் இந்தத் தொடர் இன்று (மே 25) தொடங்கி ஜூன் 2-ம் தேதி வரை நடைபெறுகிறது.
அர்ஜெண்டினாவின் ரொசாரியோ நகரில் இன்று நடைபெற்ற போட்டியில் இந்தியா மற்றும் சிலி அணிகள் மோதின. போட்டியின் 20-வது நிமிடத்தில் சிலியின் ஜாவேரியா சாயின்ஸ் கோல் அடித்து அந்த அணியை முன்னிலைக்கு கொண்டு சென்றார். இருப்பினும், இந்திய வீராங்கனை சுக்வீர் கவுர் 39-வது நிமிடத்தில் கோல் அடித்து ஆட்டத்தை சமன் செய்தார்.
வெற்றியை நிர்ணயிக்கும் கடைசி நிமிடங்களில் இந்திய அணி சிறப்பாக விளையாடியது. அணியின் கனிகா சிவாச் போட்டியின் 58-வது நிமிடத்தில் ஒரு கோல் அடிக்க, இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் சிலியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
தொடர்ந்து, இந்திய அணி நாளை (மே 26) உருகுவே அணியை எதிர்த்து விளையாடவுள்ளது.