கிராண்ட் ஸ்லாம் தொடர்களில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸில் இன்று (மே 25) தொடங்கியது. ஜூன் 8-ம் தேதி வரை நடைபெறவுள்ள இந்தத் தொடரில் உலகின் முன்னணி டென்னிஸ் வீரர்களும் வீராங்கனைகளும் சாம்பியன் பட்டத்திற்காக மோதவுள்ளனர்.
ஆடவர் ஒற்றையர் பிரிவில் நடப்பு சாம்பியனான ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ் மீது அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது. 22 வயதான அவர் இந்த ஆண்டில் களிமண் தரை ஆடுகளத்தில் விளையாடிய 16 போட்டிகளில் 15-ல் வெற்றி பெற்று சிறப்பான ஃபார்மில் உள்ளார். இவருக்கு உலகின் முதல் நிலை வீரரான இத்தாலியின் ஜன்னிக் சின்னர் கடும் சவால் அளிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 18 மாதங்களாக டென்னிஸ் உலகில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஜன்னிக் சின்னர், ஊக்க மருந்து சர்ச்சைக்குப் பிறகு சமீபத்தில் களத்திற்குத் திரும்பினார். சமீபத்தில் நடைபெற்ற இத்தாலி ஓபன் தொடரின் கால் இறுதிப் போட்டியில் அவர் இரண்டு முறை பிரெஞ்சு ஓபன் இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருந்த நார்வேயின் காஸ்பர் ரூடை வீழ்த்தினார். இருப்பினும், இறுதிப் போட்டியில் அல்கராஸிடம் தோல்வியடைந்தார். இதனால், இந்த முறை பிரெஞ்சு ஓபன் இறுதிப் போட்டியில் இவர்கள் இருவரும் நேருக்கு நேர் மோதும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
மற்றொருபுறம், 38 வயதான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் தனது 25-வது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வெல்லும் முனைப்புடன் களமிறங்குகிறார். சமீபத்தில் ஜெனீவா ஓபன் தொடரின் இறுதிப் போட்டி வரை முன்னேறியிருந்த அவர், ஏற்கனவே மூன்று முறை பிரெஞ்சு ஓபன் பட்டத்தை வென்றுள்ள அனுபவத்துடன் இளம் வீரர்களுக்கு கடும் சவாலை அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இங்கிலாந்தின் ஜேக் டிராப்பர், நார்வேயின் காஸ்பர் ரூடு, ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஜிவேரேவ் மற்றும் இத்தாலியின் லாரேன்ஸோ முசெட்டி ஆகியோரும் இந்தத் தொடரில் சிறப்பாக விளையாடக் காத்திருக்கின்றனர்.
மகளிர் ஒற்றையர் பிரிவில் நடப்பு சாம்பியனான போலந்தின் இகா ஸ்வியாடெக் தனது பட்டத்தை தக்கவைக்க களமிறங்குகிறார். அவரை எதிர்த்து பெலாரஸின் அரினா சபலென்கா, ஜப்பானின் நவோமி ஒசாகா, அமெரிக்காவின் கோ கோ காஃப், இத்தாலியின் ஜாஸ்மின் பவுலினி, ரஷ்யாவின் மிர்ரா ஆண்ட்ரீவா மற்றும் லத்வியாவின் ஜெலினா ஓஸ்டாபென்கோ ஆகியோரும் பலப்பரீட்சை நடத்தவுள்ளனர். இதனால், இந்த ஆண்டு பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் விறுவிறுப்பான ஆட்டங்களுக்கு வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.