டி20 உலகக்கோப்பைத் தொடரின் சூப்பர் 8 சுற்றின் முக்கியமான போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அபாரமாக விளையாடி இந்திய அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார் சஞ்சு சாம்சன். போட்டியின் கடைசி பந்தில் ‘வின்னிங் ஷார்ட்’ அடித்து அணியை வெற்றி பெறச் செய்த உற்சாகத்தில், சஞ்சு சாம்சன் தனது ஹெல்மெட்டைக் கழற்றி மைதானத்தில் வீசி எறிந்தார். உணர்ச்சிவசப்பட்ட நிலையில் அவர் செய்த இந்தச் செயல், தற்போது அவருக்குப் பின்னடைவாக மாற வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. பொதுவாக வீரர்கள் வெற்றியைத் துள்ளிக் குதித்துக் கொண்டாடுவது வழக்கம் என்றாலும், விளையாட்டு உபகரணங்களைக் கையாளும் முறை குறித்து ஐசிசி கடுமையான விதிகளை வைத்துள்ளது.
சஞ்சு சாம்சனின் இந்தச் செயல், ஐசிசி வீரர்களுக்கான நடத்தை விதி 2.2-ன் கீழ் (Abuse of Cricket Equipment or Clothing) வருவதாகக் கருதப்படுகிறது. இந்த விதியின்படி, ஒரு வீரர் மைதானத்தில் உள்ள உபகரணங்களையோ அல்லது தனது கிரிக்கெட் உடைகளையோ வேண்டுமென்றே சேதப்படுத்தும் விதமாகவோ அல்லது மரியாதைக் குறைவாகவோ கையாண்டால் அது குற்றமாகக் கருதப்படும். ஹெல்மெட்டை மைதானத்தில் வீசி எறிந்தது இந்த விதிமுறையை மீறுவதாகக் கருதப்பட்டால், அவருக்கு அபராதம் விதிக்கப்படலாம் அல்லது போட்டித் தடை விதிக்கப்படலாம் எனத் தெரிகிறது.
ஒருவேளை ஐசிசி சஞ்சு சாம்சனுக்கு ஒரு போட்டித் தடை விதிக்கும் பட்சத்தில், இங்கிலாந்துக்கு எதிராக நடைபெறவுள்ள மிக முக்கியமான அரையிறுதிப் போட்டியில் அவர் விளையாட முடியாமல் போகும் சூழல் உருவாகும். இந்திய அணி தற்போது அபாரமான ஃபார்மில் இருக்கும் நிலையில், முக்கிய வீரரான சாம்சன் விளையாடவில்லை என்றால் அது அணிக்குக் கூடுதல் நெருக்கடியைத் தரும்.
