தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 101 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே 5 டி20 போட்டிகள் கொண்ட டி20 போட்டித் தொடர் நடைபெறுகிறது. இதில் ஒடிசா மாநிலம், கட்டாக்கில் முதலாவது டி20 போட்டி இன்று நடைபெற்றது.
டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து இந்திய கிரிக்கெட் அணி முதலில் பேட்டிங் செய்தது. முன்னணி வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார்.
28 பந்துகளில் 59 ரன்களை ஹர்திக் பாண்டியா விளாச, 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு இந்திய அணி 175 ரன்களை குவித்தது. இதையடுத்து, 2வது பேட்டிங் செய்த தெ.ஆப்பிரிக்க அணி வீரர்கள், இந்தியாவின் சிறப்பான பந்துவீச்சுக்கு முன்பு சீட்டுக்கட்டு போல அடுத்தடுத்து அவுட்டாகினர்.
12.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தென்னாப்பிரிக்க அணி 74 ரன்களில் சுருண்டது. இதுவே டி20 போட்டிகளில் தெ.ஆப்பிரிக்க அணி எடுத்த மிகக் குறைந்த ரன்னாகும்.
இந்திய அணி தரப்பில் அனைத்து பந்துவீச்சாளர்களும் விக்கெட்டுகளை சாய்த்தனர். இதனால் போட்டியில் இந்திய அணி 101 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகன் விருது, ஹர்திக் பாண்டியாவுக்கு வழங்கப்பட்டது.
இந்த வெற்றியின் மூலம், 5 போட்டிகள் கொண்ட டி20 போட்டித் தொடரில் 1-0 என்ற புள்ளிக் கணக்கில் இந்திய அணி முன்னிலை பெற்றது.
