தெ.ஆப்பிரிக்க அணிக்கு எதிரான 3வது டி20 கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது.
தர்மசாலாவில் நடைபெற்ற இந்தப் போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து தெ.ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்தது. 2வது டி20 போட்டியில் அதிரடியாக விளையாடிய டி ஹாக் இப்போட்டியில் 1 ரன்னில் அவுட்டானார். இதேபோல் மற்ற வீரர்களும் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர்.
இதனால் 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தெ.ஆப்பிரிக்க அணி 117 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக மார்கரம் 61 ரன்கள் விளாசினார்.
இந்திய அணி தரப்பில், 4 பந்துவீச்சாளர்கள் தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர். மேலும் 2 பந்துவீச்சாளர்கள் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.
இதன்பின்னர் 118 ரன்களை இலக்காகக் கொண்டு இந்திய அணி பேட்டிங் செய்தது. ஆரம்பத்திலேயே அதிரடியாக அபிசேக் சர்மா விளையாடினார். நாலாபுறமும் அவர் விளாச இந்திய அணியின் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது.
18 பந்துகளில் 35 ரன்கள் எடுத்து இருந்தபோது அபிசேக் சர்மா ஆட்டமிழந்தார். இதையடுத்து திலக் வர்மாவும், சுப்மன் கில்லும் ஜோடி சேர்ந்தனர். திலக் வர்மா நங்கூரம் போல நிலைத்து நின்று விளையாடினார். கடைசி வரை அவுட் ஆகவில்லை. 26 ரன்களுடன் களத்தில் இருந்தார்.
முடிவில் 15.5 ஓவர்களில் இந்திய அணி 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து, 120 ரன்களை எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 2-1 என்ற புள்ளிக் கணக்கில் டி20 போட்டித் தொடரில் இந்திய அணி முன்னிலை பெற்றுள்ளது.
2 அணிகள் இடையேயான 4வது டி20 கிரிக்கெட் போட்டி, வருகிற 17-ம் தேதி லக்னோவில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் இந்திய அணி வென்றால், டி20 தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றிவிடும்.
முன்னதாக, நடந்து முடிந்த 2 டி20 கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணி ஒரு போட்டியிலும், தென்னாப்பிரிக்க அணி ஒரு போட்டியிலும் வெற்றி பெற்றிருந்தன.
