இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், 2026-ம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரின் முதல் கட்ட அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. வரும் மார்ச் 28-ம் தேதி பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் தொடங்கும் முதல் லீக் ஆட்டத்தில், நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. கடந்த முறை கோப்பையை வென்ற உற்சாகத்தில் ஆர்சிபி களம் காண இருப்பதால், தொடக்க ஆட்டத்திலேயே அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது வெளியிடப்பட்டுள்ள முதல் கட்ட அட்டவணையில் மார்ச் 28 முதல் ஏப்ரல் 12 வரை நடைபெறவுள்ள 20 போட்டிகளுக்கான விவரங்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளன. குறிப்பாக, ஏப்ரல் 5-ம் தேதி பெங்களூருவில் நடைபெறும் ஆர்சிபி – சிஎஸ்கே (RCB vs CSK) மோதல் ரசிகர்களிடையே இப்போதே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும், ஏப்ரல் 12-ம் தேதி மும்பை வான்கேடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் – ஆர்சிபி அணிகள் மோதும் ஆட்டமும் முதல் கட்டத்தின் முக்கியப் போட்டியாகக் கருதப்படுகிறது.
இதேபோல், மார்ச் 30 – RR VS CSK ( கவுகாத்தி )
ஏப்ரல் 03 – CSK VS PBKS ( சென்னை )
ஏப்ரல் 05 – RCB VS CSK ( பெங்களூரு )
ஏப்ரல் 11 – CSK VS DC ( சென்னை ) ஆகிய போட்டிகள் நடைபெறுகின்றன.
சட்டசபைத் தேர்தல்கள் நடைபெறவுள்ளதால், பாதுகாப்பு காரணங்களைக் கருத்தில் கொண்டு இரண்டாம் கட்ட அட்டவணை பின்னர் அறிவிக்கப்படும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. இந்த முறை சஞ்சு சாம்சன் சிஎஸ்கே அணிக்கும், ரியான் பராக் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் மாறியுள்ளது போன்ற பல அதிரடி மாற்றங்களுடன் தொடர் தொடங்குகிறது. ஆர்சிபி தனது ஹோம் மேட்ச்களில் சிலவற்றை ராய்ப்பூரிலும் விளையாடத் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
