2026 டி20 உலகக்கோப்பையை சூர்யகுமார் யாதவ் தலைமையில் இந்திய அணி வென்று சாதனை படைத்திருந்தாலும், அவரது தற்போதைய பேட்டிங் ஃபார்ம் பிசிசிஐ-க்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. 35 வயதாகும் சூர்யகுமார், உலகக்கோப்பை தொடரிலும் சில போட்டிகளில் ரன் குவிக்க சிரமப்பட்டதும், கையில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக அவதிப்படுவதும் தேர்வாளர்களை மாற்றுச் சிந்தனைக்கு தள்ளியுள்ளது. இதனால், 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் மற்றும் அடுத்த உலகக்கோப்பையை கருத்தில் கொண்டு, ஒரு நீண்ட கால கேப்டனை நியமிக்க பிசிசிஐ திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த போட்டியில் ஸ்ரேயஸ் ஐயர் தற்போது முன்னிலையில் உள்ளார். ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளை இறுதிப்போட்டி வரை அழைத்துச் சென்ற அவர், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு சாம்பியன் பட்டத்தையும் வென்று கொடுத்து தனது தலைமைப் பண்பை நிரூபித்துள்ளார். நடப்பு 2026 ஐபிஎல் சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக, அணியை புள்ளிப்பட்டியலில் முன்னிலைப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், பேட்டிங்கிலும் 160-க்கும் அதிகமான ஸ்டிரைக் ரேட்டில் ரன்களை குவித்து தேர்வாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
வெவ்வேறு கலாச்சாரம் கொண்ட மூன்று ஐபிஎல் அணிகளை இறுதிப்போட்டிக்கு அழைத்துச் சென்ற ஒரே கேப்டன் என்ற பெருமை ஸ்ரேயஸ் ஐயருக்கு உண்டு. இக்கட்டான சூழலில் நிதானமாக முடிவெடுக்கும் அவரது திறன் மற்றும் இளம் வீரர்களை கையாளும் விதம் அவருக்கு கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது. சஞ்சு சாம்சன், இஷான் கிஷன் போன்ற பெயர்கள் பரிசீலனையில் இருந்தாலும், கேப்டன்சி அனுபவம் மற்றும் தற்போதைய ஃபார்ம் அடிப்படையில் ஸ்ரேயஸ் ஐயரே இந்திய டி20 அணியின் அடுத்த கேப்டனாக நியமிக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
