கர்நாடகாவில் ஆர்சிபி அணி வெற்றியைக் கொண்டாடும் விதமாக நடந்த வெற்றி விழாவில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு, 13 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்த பொதுநல வழக்கு கர்நாடக உயர்நீதிமன்றத்தில் போடப்பட்ட நிலையில், அரசு தரப்பை நீதிபதிகள் சரமாரியான கேள்விகளால் துளைத்தெடுத்துள்ளனர். “மாநிலத்துக்காக விளையாடாத அணிக்கு, மாநில அரசு பெரும் விழா எடுத்துக் கொண்டாட வேண்டிய அவசியம் என்ன?” என்று சாடியுள்ளனர். ஆர்சிபி வெற்றியை அரசியலாக்கிய கர்நாடக அரசு, அடுத்தமுறை இப்படி நடக்காமல் பார்த்துக் கொள்கிறோம் என்று சப்பைக்கட்டு கட்டிவிட்டுத் திரும்பியிருக்கிறது.
ஆர்சிபி கர்நாடக அரசின் அணியா?
ஐபிஎல் தொடரில் இந்திய மாநிலங்களின் பெயர்களில் அணிகள் இருந்தாலும், அந்தந்த மாநிலங்களின் ரசிகர் படையை அவ்வணிகள் பெற்று வளர்ந்தாலும் உண்மையில் மாநில அரசுகளுக்கும் அவ்வணிகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அவை அணைத்தும் குறிப்பிட்ட மாநிலங்களைச் சேர்ந்த பெரும் தொழிலதிபர்களால் நடத்தப்படும் கிரிக்கெட் அணி ஆகும். இந்த அடிப்படைப் புரிதல் கூட இல்லாமல், கர்நாடகாவுக்கு இந்த சீசனின் பாதியிலிருந்து கர்நாடக அரசு கண்மூடித் தனமான ஆதரவை வழங்கி வந்தது. “பெங்களூரு அணியுடன் கர்நாடக அரசு நிற்கிறது. அணி நிச்சயம் வெல்லும்” என்றெல்லாம் அம்மாநில துணை முதலமைச்சர் டி.கே சிவக்குமார் பதிவிட்டு அனலைக் கிளப்பினார். அதன் வெளிப்பாடாகத்தான் ஆர்சிபி அணி வெற்றி பெற்றதும் பிரமாண்ட வெற்றி விழா கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டம்
ஆர்சிபி வெற்றி பெற்ற உடனேயே, கர்நாடக அரசும், ஆர்.சி.பி நிர்வாகமும் இணைந்து, வெற்றி விழாவை பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் மிகப்பெரிய அளவில் நடத்தின. ஜூன் 3-ம் தேதி நடைபெற்ற இவ்விழாவில் மக்கள் பேரணி, ரோடு ஷோ எனக் கோலாகலமாகத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், அதற்குப் போதுமான முன்னேற்பாட்டு வசதிகள் மேற்கொள்ளப்படவில்லை என்று கூறப்படுகிறது. 17 ஆண்டு காலம் காத்திருந்து ஆர்சிபி வென்றிருக்கும் நிலையில், உச்சகட்ட உணர்ச்சிக் கொந்தளிப்பில் இருந்த ரசிகர்கள் லட்சக் கணக்கில் திரண்டனர். 30,000 பேர் அமரக் கூடிய மைதானத்திற்கு வெளியே சுமார் இரண்டரை லட்சம் பேர் திரண்டதாக அம்மாநில அரசு நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறது. இரவு 10.30 மணிக்கு மேலும் கூட்டம் குறையாமல் இருந்தது. டிக்கெட் இல்லாதவர்களும் முண்டி அடித்துக்கொண்டு நுழைந்தனர். இதனாலேயே பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டு, கூட்ட நெரிசல் உண்டானது. அதில் சிக்கிய பலருக்குக் காயம் ஏற்பட்டது. 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு
பெங்களூரு கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களுக்கு அரசின் சார்பில் தலா 5 லட்சமும், ஆர்சிபி சார்பில் தலா 5 லட்சமும் வழங்கப்பட்டது. ஆனால், ஆரம்பத்திலிருந்தே இதை காங்கிரஸ் அரசியலாக்கப் பார்க்கிறது என்று பாஜக உள்ளிட்ட கட்சியினர் கடும் விமர்சனத்தை முன் வைத்து வந்தனர். இந்நிலையில், இதுகுறித்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆர்சிபி வெற்றி விழாக் கூட்டத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் முற்றிலும் தவறியுள்ளதாகவும், இதற்கு அரசு நேரடியாக பொறுப்பேற்க வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டது. இந்த வழக்கில், ஆர்சிபி அணியின் அதிகாரிகளும், காவல்துறையும், நகராட்சி நிர்வாகமும் நேரில் ஆஜராக சொல்லப்பட்டது. வழக்கு விசாரணையின் போது நீதிபதி, “ஒரு கிரிக்கெட் வெற்றிக்காக இந்தளவுக்கு அரசியல் மையப்படுத்தப்பட வேண்டுமா?” என கேள்வி எழுப்பினார். இது அரசியல் நோக்கத்துடன் நிகழ்ச்சி நடத்தப்பட்டது எனவும், போட்டி முடிந்த பத்து நாட்களுக்குள் விழா நடத்த வேண்டிய அவசியம் என்ன? என்றும் நீதிமன்றம் அரசு தரப்பை கடுமையாக கேள்வி எழுப்பியது.
அரசியலாக்கப்பட்ட ஆர்சிபி வெற்றிவிழா
கர்நாடக மாநில காங்கிரஸ் அரசு, ஆர்.சி.பி வெற்றியை தனது சாதனையாக மக்களுக்கு விளம்பரப்படுத்த நினைத்தது என எதிர்க்கட்சியான பாஜக குற்றம்சாட்டியது. கூட்ட நெரிசல் ஏற்பட்டதும், அம்மாநில முதலமைச்சர் பதவி விலக வேண்டும் என்று பாஜகவினர் போராட்டங்களை முன்னெடுத்தனர். அதற்கு பதிலளித்த காங்கிரஸ், “ஆர்.சி.பி வெற்றி என்பது கர்நாடக மக்களின் வெற்றி; இதனை அரசியல் ஆக்க வேண்டிய அவசியம் இல்லை. மக்கள் மனதில் ஆனந்தத்தை தர வேண்டும் என்பதே நோக்கம்” என கூறியது. ஆனால், விழாவில் அமைச்சர்கள், அரசியல் பிரமுகர்கள் கலந்துகொண்டதும், அரசு சார்பில் பெரும்பான்மை அனுமதிகள் கொடுக்கப்பட்டதும் அரசியல் நோக்கத்துடன் தான் இந்த விழா நடந்தது என விமர்சனத்தைக் கிளப்பியது.
சமூக வலைதள விவாதங்கள்
இந்நிகழ்வு பற்றி சமூக வலைதளங்களில் ஆர்சிபி ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். “ஆர்சிபியின் வெற்றி ரசிகர்களுக்கானதே தவிர இதில் அரசியல் செய்வதற்கு எதுவுமில்லை. இதை அரசியலாக்கக் கூடாது” என்று கருத்து கூறி வருகின்றனர். “மக்களின் அடிப்படை வசதி கோரிக்கைகள் வெகு காலமாக கிடப்பில் இருக்கும்போது ஐபிஎல் வெற்றியை இவ்வளவு பிரமாண்டமாக கொண்டாட வேண்டுமா” என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர். மறுபுறம், ”அரசின் மீது மட்டும் பழி போட முடியாது, கட்டுப்பாட்டை மீறி லட்சக் கணக்கில் ரசிகர்கள் திரள வேண்டியதன் அவசியம் என்ன? ரசிகர்களும் கொஞ்சம் நிதானத்தைக் கடைபிடித்திருக்கலாம்” என்று நடுநிலையாளர்கள் விமர்சித்து வருகின்றனர்.
நீதிமன்றம், இவ்வழக்கை தாமாக முன்வந்து பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என நீதிமன்ற பதிவுத்துறைக்கு உத்தரவிட்டிருக்கிறது. மேலும் இதன் விசாரணையை ஜூன் 10-ம் தேதிக்கு ஒத்தி வைத்திருக்கிறது. ஒரு கிரிக்கெட் வெற்றியைக் கூட அரசியல் ஆக்காமல் விட மாட்டார்களா என இச்சம்பவம் ரசிகர்களோடு சேர்த்து நீதிமன்றத்தையும் முகம் சுழிக்க வைத்திருக்கிறது.