இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. இந்த நிலையில், இவ்விரு அணிகளுக்கான 3வது டெஸ்டின் முதல் நாள் ஆட்டம் இன்று நடைபெறுகிறது. லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் பிரசித் கிருஷ்ணாவுக்கு பதிலாக பும்ரா இடம் பிடித்துள்ளார்.
முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பென் டக்கெட் – ஜாக் கிராலி ஆகியோர் களமிறங்கி நிதானமாக ஆடினர். இந்த இன்னிங்சின் 14 ஓவரை வீசிய நிதிஷ் ரெட்டி அந்த ஓவரில் இங்கிலாந்து தொடக்க ஆட்டக்காரர்களின் விக்கெட்டை கைப்பற்றி அசத்தினார். பென் டக்கெட் (23 ரன்கள்), ஜாக் கிராலி (18 ரன்கள்) இரண்டு பேரும் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்டிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினர்.
இந்த ஆட்டத்தில் இந்திய அணியின் விக்கெட் கீப்பரான ரிஷப் பண்ட் பாதியில் வெளியேறினார். பும்ராவின் பந்துவீச்சில் 2 முறை கையில் காயமடைந்த அவர், சிகிச்சைக்காக பெவிலியன் திரும்பினார். அவருக்கு பதிலாக துருவ் ஜூரெல் விக்கெட் கீப்பிங் செய்தார். அவரது காயத்தின் தன்மை குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை.
