இந்திய அணியில் தற்பொழுது ரோஹித் ஷர்மா ஒரு நாள் போட்டிகளில் மட்டுமே விளையாடிக் கொண்டிருக்கிறார். தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக நடைபெற்றுக் கொண்டிருக்கும் மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் அவர் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

மறுபக்கம் டொமஸ்டிக் லெவலில் நடைபெறும் சையது முஷ்டாக் அலி தொடர் பரபரப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த தொடர் வரும் டிசம்பர் 18ஆம் தேதி அன்று நிறைவு பெறும். இந்தத் தொடரில் மும்பை அணிக்காக நாக்கவுட் போட்டிகளில் விளையாட விரும்புவதாக ரோஹித் ஷர்மா தனது ஆசையை வெளிப்படுத்தியுள்ளார்.
20 ஓவர் கிரிக்கெட் ஃபார்மேட்டில் விளையாடப்படும் இந்த சையது முஷ்டாக் அலி தொடரில் அதிகபட்சமாக தமிழ்நாடு அணி மூன்று முறை கோப்பையை வென்றிருக்கிறது. அதற்கு அடுத்தபடியாக மும்பை அணி இரண்டு முறை கோப்பையை வென்று இருக்கிறது. இந்தத் தொடரில் தங்களது திறமையை நிரூபித்து நிறைய உள்ளூர் வீரர்கள் ஐபிஎல் தொடரில் விளையாடிய கதை ஏராளம்.
பரபரப்புக்கு பஞ்சம் இருக்காத இந்த சையது முஷ்டாக் அலி தொடரில் ரோஹித் ஷர்மா மும்பை அணிக்காக விளையாடினால் நிச்சயமாக இத்தொடர் இன்னும் சற்று சூடு பிடிக்கும். மேலும் ஒரு விஷயத்தை நினைவுகூர்ந்து பார்த்தால், இந்தத் தொடரில் முதல்முறையாக சதம் அடித்த பெருமை ரோஹித் ஷர்மாவை தான் சேரும்.

2006-2007 முதல் முறையாக நடந்த சையது முஷ்டாக் அலி தொடரில் மும்பை அணிக்காக விளையாடிய ரோஹித் ஷர்மா தனது முதல் சதத்தை குஜராத் அணிக்கு எதிராக அடித்தார்.
