சர்வதேச கிரிக்கெட்டில் 20 ஆயிரம் ரன்களை கடந்த 4வது இந்திய வீரர் என்ற புதிய சாதனை படைக்க இந்திய வீரர் ரோஹித் சர்மாவுக்கு இன்னும் 41 ரன்களே தேவைப்படுகின்றன.
இந்திய அணி தரப்பில் சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி, டிராவிட் ஆகியோரே இதுவரை சர்வதேச கிரிக்கெட்டில் 20 ஆயிரம் ரன்களை குவித்து சாதனை படைத்துள்ளனர். இதில் முதலாவதாக உள்ள சச்சின் 34,357 ரன்களும், 2வதாக உள்ள கோலி 27,808 ரன்களும், 3வதாக உள்ள டிராவிட் 24,604 ரன்களும் குவித்துள்ளனர்.
மேலும் 41 ரன்கள் சேர்த்தால், இந்தப் பட்டியலில் ரோஹித்தும் இடம்பிடிப்பார். தெ.ஆப்பிரிக்க அணிக்கு எதிராக மேலும் 2 ஒருநாள் போட்டிகள் உள்ளன. இந்த 2 போட்டிகளில் ரோஹித் சர்மா 41 ரன்கள் சேர்க்கும்பட்சத்தில் 20 ஆயிரம் ரன்களுக்கு மேல் குவித்த 4வது இந்திய வீரர் எனும் சாதனையை படைப்பார்.
இதுவரை 503 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள ரோஹித் சர்மா, 19,959 ரன்களை விளாசியுள்ளார். இது சராசரி 42.46 சதவீதம் ஆகும். இதில் 50 சதம், 110 அரை சதங்களும் அடங்கும்.
