தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் காயம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.
2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காக தென்னாப்பிரிக்கா அணி இந்தியா வந்துள்ளது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் முதல் போட்டி நடந்தது. முதல் இன்னிங்சில் சைமன் ஹார்மர் பந்து வீச்சை எதிர்கொண்ட இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில், பந்தை பவுண்டரிக்கு அடித்துவிட்டு, நிமிர்ந்த போது, கழுத்தில் காயம் ஏற்பட்டு வலியால் துடித்தார். உடனடியாக அணியின் பிசியோதெரபிஸ்ட் வந்து பரிசோதித்த பிறகும், கழுத்து பகுதியில் வலி அதிகமாக இருந்ததன் காரணமாக சுப்மன் கில் மைதானத்தை விட்டு வெளியேறினார். அதன் பிறகு அவர் பேட் செய்ய மைதானத்திற்கு வரவில்லை.
இந்தநிலையில், கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனையில் ஒன்றில் சிகிச்சைக்காக சுப்மன் கில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கழுத்துப் பகுதியில் ஸ்கேன் செய்யப்பட்டு மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பதாக பிசிசிஐ தெரிவித்தது. இந்தநிலையில், சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் இருந்து சுப்மன் கில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். இருப்பினும், 5 நாட்கள் அவர் முழு ஓய்வில் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். கழுத்து வலி காரணமாக 2வது முறையாக டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை சுப்மன் கில் தவறவிடுவது குறிப்பிடத்தக்கது.
