சர்வதேச கிரிக்கெட்டில் 750 விக்கெட்டுகளை வீழ்த்திய மூன்றாவது ஆஸ்திரேலிய வீரர் என்ற பெருமையை மிட்செல் ஸ்டார்க் பெற்றுள்ளார்.
ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் டெஸ்ட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மொத்தம் 5 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் இதுவரை மூன்று போட்டிகள் முடிந்துள்ள நிலையில், மூன்றிலும் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றியைப் பதிவு செய்து 3-0 என்ற கணக்கில் தொடரையும் வென்றுள்ளது. மேலும் ஆஷஸ் கோப்பையையும் அந்த அணி கைப்பற்றி அசத்தியுள்ளது.
அந்தவகையில் அடிலெய்டில் நடைபெற்ற தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 371 ரன்களையும், அதனைத் தொடர்ந்து முதல் இன்னிங்ஸில் விளையாடிய இங்கிலாந்து அணி 286 ரன்களையும் சேர்த்து ஆல் அவுட்டானது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 85 ரன்கள் முன்னிலைப் பெற்றது.
பின்னர் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த ஆஸ்திரேலிய அணி 349 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானதுடன், இங்கிலாந்து அணிக்கு 435 ரன்கள் என்ற சவாலான இலக்கையும் நிர்ணயித்தது. அதன்பின், இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணியில் ஜாக் கிரௌலி 85 ரன்களையும், ஜேமி ஸ்மித் 60 ரன்களையும், வில் ஜேக்ஸ் 47 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் பெரிதளவில் சோபிக்க தவறினர்.
இதனால் அந்த அணி 352 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 82 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவு செய்ததுடன், 3-0 என்ற கணக்கில் ஆஷஸ் டெஸ்ட் தொடரையும் வென்று சாதித்துள்ளது. இந்த போட்டியின் இரண்டு இன்னிங்ஸிலும் அபாரமாக செயல்பட்ட அலெக்ஸ் கேரி ஆட்டநாயகன் விருதை வென்றார்.
இந்த நிலையில், ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் இப்போட்டியில் மொத்தமாக 4 விக்கெட்டுகளை கைப்பற்றியதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் தனது 750 விக்கெட்டுகளை பூர்த்தி செய்திருந்தார். இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணிக்காக 750+ விக்கெட்டுகளை வீழ்த்திய மூன்றாவது வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். இதற்கு முன் ஷேன் வார்னே மற்றும் கிளென் மெக்ராத் ஆகியோர் மட்டுமே இந்த சாதனையைப் படைத்திருந்தனர்.
ஆஸ்திரேலிய அணிக்காக அதிக விக்கெட்டுகள்
- ஷேன் வார்னே – 1,001 விக்கெட்டுகள்
- கிளென் மெக்ராத் – 949 விக்கெட்டுகள்
- மிட்செல் ஸ்டார்க் – 750 விக்கெட்டுகள்
- பிரெட் லீ – 718 விக்கெட்டுகள்
- நாதன் லையன் – 597 விக்கெட்டுகள்
இதுதவிர்த்து சர்வதேச கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் பட்டியலிலும் மிட்செல் ஸ்டார்க் 13ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். இதில் இலங்கை ஜாம்பவான் முத்தையா முரளிதரன் 1,347 விக்கெட்டுகளுடன் முதலிடத்திலும், ஆஸ்திரேலியாவின் ஷேன் வார்னே 1,001 விக்கெட்டுகளுடன் இரண்டாம் இடத்திலும், இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சன் 991 விக்கெட்டுகளுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளனர்.
