ஹிட் மேன் என்றழைக்கப்படும் இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன்  ரோஹித் சர்மா, இன்று (ஏப்ரல் 30) தனது 39-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். நாக்பூரில் 1987ஆம் ஆண்டு இதே நாளில் பிறந்த இவர், இந்திய அணிக்காக 14 ஆண்டுகள் விளையாடி வரும் ரோகித் சர்மா, சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் பல சாதனைகளை படைத்துள்ளார்.

கடந்த 2007ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் அயர்லாந்து அணிக்கு எதிரான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அறிமுகமான ரோகித் சர்மா, 3 ஆண்டுகளுக்குப் பிறகே தனது முதல் சதத்தை பதிவு செய்தார். ஆனால், 2013ஆம் ஆண்டு சாம்பியன் டிராபியில் ஷிகர் தவானுடன் தொடக்க வீரராக களமிறங்கிய ரோகித் சர்மா, அன்றிலிருந்து தொடக்க வீரர் என்ற வாய்ப்பை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரராக மாறியுள்ளார்.

கிரிக்கெட் உலகில் 200 ரன்கள் எடுப்பது என்பது ஒரு எட்டாக் கனியாக இருந்த காலத்தில், மூன்று முறை இரட்டைச் சதங்களை விளாசி அதைச் சர்வசாதாரணமாக மாற்றிக் காட்டியவர் ரோஹித். பந்துவீச்சாளர்களின் வேகத்தை தனது பேட்டிங்கால் அடக்கி ஆளும் இவரின் ‘புல் ஷாட்’ (Pull Shot) மற்றும் ‘ஃபிளிக் ஷாட்டுகள்’ உலகெங்கிலும் உள்ள ரசிகர்களுக்கு ஒரு கண்கொள்ளாக் காட்சியாகும்.

முதல் இரட்டை சதத்தை 2013ஆம் ஆண்டு நவம்பர் 2ஆம் தேதியும், இரண்டாவது இரட்டை சதத்தை 2014 நவம்பர் 13ஆம் தேதியும், மூன்றாவது இரட்டை சதத்தை 2017 டிசம்பர் 13ஆம் தேதியும் அடித்துள்ளார். 209, 264, 208* என இரட்டை சதங்களை அடித்துள்ள ரோகித் சர்மா, சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிக இரட்டை சதங்களை அடித்த ஒரே வீரர் ஆவார்.

தோனிக்குப் பிறகு உலகக்கோப்பைக்காக ஏங்கிக் கொண்டிருந்த இந்திய அணிக்கு, 2024 டி20 உலகக்கோப்பை மற்றும் 2025 சாம்பியன்ஸ் டிராபி ஆகியவற்றை வென்று கொடுத்து, இந்திய ரசிகர்களின் நீண்ட கால தாகத்தைத் தணித்த பெருமை இவருக்கு உண்டு.

மும்பை இந்தியன்ஸ் அணியின் வெற்றிகரமான கேப்டனாகத் திகழ்ந்த இவர், தற்போது டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ள நிலையிலும், ஒருநாள் போட்டிகளில் தனது அதிரடியைத் தொடர்ந்து வருகிறார். வயது ஒரு தடையல்ல என்பதை நிரூபிக்கும் வகையில், கடினமான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு தனது உடற்தகுதியை மேம்படுத்தி வரும் இவர், இளம் வீரர்களுக்குப் பெரும் சவாலாகத் திகழ்கிறார்.

ரோகித் சர்மா தலைமையின் கீழ் மும்பை இந்தியன்ஸ் அணி 5 முறை சாம்பியன் கோப்பையை கைப்பற்றியுள்ளது. 2013, 2015, 2017, 2019, 2020 ஆகிய ஆண்டுகளில் மும்பை அணிக்கு கோப்பையை வென்று கொடுத்த ரோகித் சர்மா, 2009ஆம் ஆண்டு ஆடம் கில்கிறிஸ்ட் தலைமையில் கோப்பையை வென்ற டெக்கான் சார்ஜர்ஸ் அணியிலும் இடம்பிடித்து இருந்தார். இதன்மூலம் 6 சாம்பியன் கோப்பைகளை வென்ற அணியில் இடம்பிடித்து இருந்தவர் என்ற சாதனையையும் ரோகித் படைத்துள்ளார்.

சமீபத்தில் அளித்த நேர்காணலில், “2027 ஒருநாள் உலகக்கோப்பையை வெல்வதே எனது இறுதி இலக்கு; அதை வெல்வதற்காக எனது முழுத் திறனையும் பயன்படுத்துவேன்” என உணர்ச்சிப்பூர்வமாகத் தெரிவித்தது ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. 2027 உலகக்கோப்பை தென்னாப்பிரிக்கா மற்றும் ஜிம்பாப்வே மண்ணில் நடைபெறவுள்ள நிலையில், இந்தியாவிற்கு அந்த மகுடத்தைச் சூட்ட வேண்டும் என்ற முனைப்பில் இருக்கும் ரோஹித் சர்மாவிற்கு, சமூக வலைதளங்களில் பிசிசிஐ மற்றும் சக வீரர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version