இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவியிலிருந்து கவுதம் காம்பீர் நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக விவிஎஸ் லட்சுமண் நியமிக்கப்பட இருப்பதாக வெளியான தகவலை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) மறுத்துள்ளது.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது. அதற்கு முன்பு நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டித் தொடரிலும் 3-0 என்ற கணக்கில் இந்திய அணி படுதோல்வியை சந்தித்திருந்தது.
12 ஆண்டுகளாக டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணி தோல்வியை தவிர்த்த நிலையில், இது ரசிகர்களிடையே கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனால் பயிற்சியாளர் கவுதம் காம்பீர் கடும் விமர்சனத்திற்கு ஆளானார்.
இந்நிலையில் கவுதம் காம்பீரை மாற்றிவிட்டு, லட்சுமணை டெஸ்ட் அணிக்கான பயிற்சியாளராக நியமிக்க கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் முடிவு செய்து, அவரை அணுகியதாக கடந்த சில நாள்களாக தொலைக்காட்சிகளில் செய்திகள் வெளியாகின. இதனால் இந்திய கிரிக்கெட் அணி ரசிகர்கள் இடையே பரபரப்பு நிலவியது.
இந்தத் தகவல் குறித்து கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய செயலாளர் தேவஜித் சகியாவிடம் செய்தியாளர்களிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், “அந்த செய்தியில் உண்மையில்லை, அவை அடிப்படை ஆதாரமில்லாதவை” என்றார். டெஸ்ட் அணிக்கான பயிற்சியாளரை மாற்றும் திட்டம் எதுவும் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திடம் இல்லை என்றும் அவர் கூறினார்.
