இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் ஆட்டத்தில், இங்கிலாந்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்த தொடர் 4-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சிக்கு(2025-2027) உட்பட்டது.
இந்த போட்டி நிறைவடைந்ததை அடுத்து 4-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சிக்கான புள்ளி பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டுள்ளது. அதில் இந்த சுழற்சியில் முதல் போட்டியை இந்தியாவை வீழ்த்தி வெற்றியுடன் தொடங்கியுள்ள இங்கிலாந்து 100 சதவீத புள்ளியுடன் முதலிடத்தில் உள்ளது.

2-வது மற்றும் 3-வது இடங்களில் 33.33 சதவீத புள்ளிகளுக்கு வங்காளதேசம் மற்றும் இலங்கை அணிகள் உள்ளன. தோல்வியை தழுவிய இந்திய அணி இன்னும் புள்ளிக் கணக்கை தொடங்காமல் 4-வது இடத்தில் உள்ளது. இதில் இடம்பெற்றுள்ள மற்ற அணிகளான ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், நடப்பு சாம்பியன் தென் ஆப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகியவை இன்னும் இந்த சுழற்சியில் போட்டிகளில் ஆடவில்லை. இதனால் அந்த அணிகளுக்கு புள்ளிகள் எதுவும் குறிப்பிடவில்லை.
ஒவ்வொரு அணிகளும் போட்டிகளில் விளையாட விளையாட புள்ளி பட்டியல் மாறிக்கொண்டே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
