தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த வேல்மணி என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் தாமிரபரணி ஆறு செல்கிறது. இந்த ஆற்றுப்படுகை மற்றும் இந்த பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் சீர்படுத்துகிறோம் என்ற பெயரில் மணல் கொள்ளை நடக்கிறது. அதேபோல இங்கு உள்ள நீர்நிலைகளில் சட்டவிரோதமாக மணல் அள்ளப்பட்டு வருகிறது. அதாவது, எந்தவித அனுமதியும் பெறாமல் சட்டவிரோதமாக தனிநபர்கள் மணல் அள்ளி வருகின்றனர்.
இதனால் இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் படுபாதாளத்துக்கு செல்லும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. விவசாயமும் கடுமையாக பாதிக்கப்படுகிறது. இந்த நிலை நீடித்தால் இப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிவிடும்.
இந்தநிலையை தவிர்க்க ஸ்ரீவைகுண்டம் பகுதியில் சட்டவிரோதமாக மணல் அள்ளுவதை தடுக்க கடும் நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு புகார் மனு அனுப்பினேன். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.எனவே எனது மனுவின் அடிப்படையில் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் மணல் அள்ளுவதை தடுக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனுக்கள் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், மரிய கிளாட் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.
விசாரணை முடிவில், தூத்துக்குடி மாவட்டத்தில் மணல் கொள்ளையை அதிகாரிகள் தடுக்காதது ஏன் என்பது சம்பந்தமாக விசாரிக்க ஒரு சிறப்பு அதிகாரியை மாவட்ட கலெக்டர் நியமிக்க வேண்டும். அவரது விசாரணை ஆவணங்களை இந்த கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.