புதுக்கோட்டையைச் சேர்ந்த சபீக்யாசிர் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில், “புதுக்கோட்டை பாப்புலர் மர ஆலை அருகே அமைந்துள்ள ரெட்போர்ட் மனமகிழ் (மதுபான) மன்றம் செயல்பட தடை விதித்து உத்தரவிடக் கோரி வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம், மரியகிளாட் அமர்வு, “புதுக்கோட்டை பகுதியில் அரசு டாஸ்மாக் கடைக்கு நேர் எதிரே ரெட்போர்ட் மனமகிழ் மன்றம் தொடங்கப்பட்டுள்ளது. காலை 11:00 மணி முதல் இரவு 11 மணி வரை இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே டாஸ்மாக் பார் வசதியுடன் அமைந்துள்ள நிலையில், அதற்கு எதிரே தனியார் மனமகிழ் மன்றம் அமைக்கப்பட்டிருப்பதால் இப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதற்கு எதிராக போராட்டங்களையும் நடத்தி உள்ளனர். இருப்பினும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மன மகிழ் மன்றம் கூட்டுறவு சங்கங்களின் விதிப்படி செயல்பட்டு வருகிறது.
கூட்டுறவு சங்க விதிகளின்படி ஏதேனும் சட்ட விரோதமான செயல்கள் நடைபெறுவது குறித்து தெரிய வந்தால், அது தொடர்பாக விசாரிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட சங்கத்திடம் விளக்கம் பெற்று சட்ட விரோத செயல்பாடு உண்மையாக இருப்பின் சம்பந்தப்பட்ட சங்கத்தின் உரிமத்தை ரத்து செய்யலாம். கூட்டுறவு சங்கங்களின் கீழ் அனுமதி வழங்கப்படும் சங்கங்களின் செயல்பாடு குறித்து குறிப்பிட்ட கால இடைவெளிகளில் எவ்விதமான சோதனைகளும் செய்யப்படுவதில்லை.
அது தொடர்பாக புகார்கள் வந்தாலும் பதிவுத்துறை முறையாக விசாரிக்கவில்லை என்பது பொதுவான புகாராக உள்ளது. ஆகவே பதிவு துறையின் தலைவர், அனைத்து அலுவலர்களுக்கும் கூட்டுறவு சங்க விதிப்படி பதிவு செய்துள்ள சங்கங்கள், கிளப்களின் ஆவணங்கள், செயல்பாடுகள் முறையாக இருக்கிறதா? என்பது குறித்து ஆய்வு செய்ய அறிவுறுத்த வேண்டும்.
ஏதேனும் தேவையற்ற சட்டவிரோத செயல்கள் நடைபெறுவது தெரிய வந்தால் சங்கங்கள் பதிவு விதிகளின் அடிப்படையில் அவற்றின் பதிவை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுபோல உரிமம் ரத்து செய்யப்படும் சங்கங்கள் மீண்டும் இயங்காமல் இருப்பதை காவல்துறையினர் உறுதிப்படுத்த வேண்டும்.
2021 ஆம் ஆண்டு தமிழக காவல்துறை தலைவர் கிளப்-கள், கூட்டுறவு சங்கங்கள் தொடர்பாக ஏதேனும் வழக்கு பதிவு செய்யப்பட்டால் அதனை சம்பந்தப்பட்ட மாவட்ட பதிவாளரின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என சுற்றறிக்கையை அனுப்பினார். காவல்துறையினர் இது போன்ற கிளப்-களின் நடவடிக்கைகளை கண்காணித்து பொதுமக்களுக்கு இடையூறாக இருப்பின் அது தொடர்பாக குற்ற வழக்குகள் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த வழக்கில் புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளரை நீதிமன்றம் தாமாக சேர்த்து உத்திரவிடுகிறது. ரெட்போர்ட் மனமகிழ் மன்றம் தொடர்பாக விசாரித்து அதன் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இதுபோல பதிவு செய்யப்பட்ட கிளப்-களால் பிரச்சனை எழுகையில் சம்பந்தப்பட்ட மாவட்ட பதிவாளரிடம் தமிழ்நாடு கூட்டுறவு சங்க பதிவு விதிகளின் அடிப்படையில் புகார் அளிக்கலாம்.
அது குறித்து பதிவுத்துறையினர் முறையாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். புகார்கள் வராத பட்சத்திலும் காவல்துறையிடம் இருந்து வழக்கு பதிவு தொடர்பான விபரங்கள் கிடைக்கப்பெற்றாலும் மாவட்ட பதிவாளர் விசாரித்து பதிவை ரத்து செய்யவும், மதுவிலக்கு துறை பாரின் உரிமத்தை ரத்து செய்யவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இது போன்ற பிரச்சனைகள் பொதுமக்களால் முன்வைக்கப்படும் போது நடவடிக்கை எடுக்க தயங்கும், தாமதப்படுத்தும் ஊழியர்கள் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பதிவுத்துறை மற்றும் மதுவிலக்கு துறையுடன் இணைந்து ரெட்போர்ட் மனமகிழ் மன்றம் தொடர்பாக முறையாக ஆய்வு செய்து விசாரித்து உரிய நடவடிக்கையை 4 வாரங்களுக்குள் எடுக்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.