ஆண்டிபட்டி அருகே ரெங்கசமுத்திரம் ஊராட்சியில் ஆறு மாதங்களுக்குப் பிறகு 100 நாள் வேலைக்கு அழைத்த நிலையில் வேலை வழங்காமல் அலைக்கழித்ததாக 100 நாள் வேலை பணியாளர்கள் ஆத்திரத்தில் சாலை மறியல் போராட்டம். கடந்த ஆறு மாதங்களாக 100 நாள் வேலைப் பணி முறையாக வழங்கப்படவில்லை என குற்றச்சாட்டு.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகா ரெங்கசமுத்திரம் ஊராட்சிக்குட்பட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த சுமார் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் 100 நாள் வேலை திட்டத்தில் பதிவு செய்து பணிபுரிந்து வரும் நிலையில்,கடந்த 6 மாதங்களாக இவர்களுக்கு 100 நாள் வேலைப்பணி முறையாக வழங்காமல் ஊராட்சி நிர்வாகம் அலைக்கழிப்பதாக பணியாளர்கள் குற்றம்சாட்டி வந்த நிலையில்,
6 மாதங்களுக்கு பிறகு இன்று 100 நாள் வேலைக்கு ஊராட்சியில் பணிபுரியும் 100 நாள் வேலைத்திட்ட பணித்தள பொறுப்பாளர் அழைத்த நிலையில், ரெங்கசமுத்திரம், ஜம்புலிபுத்தூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் காலை வேலைக்கு வந்த நிலையில் காலை 9மணி வரை ஊராட்சி நிர்வாகத்தில் இருந்து அலுவலர்கள் எவரும் வரவில்லை என்றும், பணித்தள பொறுப்பாளருக்கு போன் செய்தால் போனை சுவிட்ச் ஆப் செய்ததாகவும் குற்றம் சாட்டினர். வேலைக்கு வந்து வேலை கிடைக்காத ஆத்திரத்தில் 100 நாள் வேலை திட்ட பெண்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆண்டிபட்டி வைகை அணை செல்லும் சாலையில் ஜம்புலிபுத்தூர் பகுதியில் சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் ஆண்டிப்பட்டி வைகை அணை சாலையில் பரபரப்பான சூழல் நிலவியது. சம்பவ இடத்திற்கு வந்த ஆண்டிப்பட்டி போலீசார் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட நபர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது கிராம வட்டார வளர்ச்சி அலுவலர் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.அப்போது கிராம வட்டார வளர்ச்சி அலுவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் தங்களுக்கு முறையாக 100 நாள் வேலை திட்ட பணிகள் வழங்க வேண்டும் என்றும்,
ஊராட்சியில் உள்ள பணித்தள பொறுப்பாளர் வேறு பகுதியைச் சேர்ந்தவர் என்பதால் தங்கள் பகுதியைச் சேர்ந்தவரையே நியமிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.அதனைத் தொடர்ந்து கிராம வட்டார வளர்ச்சி அலுவலக உரிய நடவடிக்கை எடுத்து வேலை முறையாக வழங்குவதாக கூறியதன் அடிப்படையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பணியாளர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.