திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே உள்ள மேல்நகர் கிராமத்தில் அதிமுக பிரமுகர் எம்.சி.ரவி என்பவரது வீட்டில் இருந்து 2 டன் செம்மரக்கட்டைகளை காவல்துறை மற்றும் வருவாய் துறையினர் பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாது மலையில் இருந்து அமிர்தி வழியாக கண்ணமங்கலம் பகுதிக்குள் கடந்த சில நாட்களாக மர்ம ஆசாமிகள் செம்மரக்கட்டைகளை கொண்டு வந்து குடோனில் பதுக்கி வைத்து, ஆந்திரா மாநிலத்திற்கு கடத்திச் சென்று வருவதாக சிறப்பு புலனாய்வு காவல் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
அதன் அடிப்படையில் சிறப்பு புலனாய்வு காவல் துறையினர் கண்ணமங்கலம் சுற்றியுள்ள பகுதிகளில் சில தினங்களாக தீவிரமாக சோதனையில் ஈடுபட்டு வந்தனர். இதன் ஒரு பகுதியாக இன்று அதிமுக மாவட்டப் பிரதிநிதி எம்.சி. ரவி என்பவருக்கு சொந்தமான வீட்டை போலீசார் சோதனை செய்தனர். அப்போது அவரது வீட்டிற்குள் சுமார் 2 டன் செம்மரக்கட்டைகள் இருப்பது போலீசார் மற்றும் வருவாய் துறையினருக்கு தெரிய வந்தது. இதனை அடுத்து அவற்றை பறிமுதல் செய்தனர்.
இது குறித்து காவல் துறையினர் மற்றும் வனத் துறையினர் அக்கம்பக்கத்தில் விசாரணை மேற்கொண்ட போது அதிமுக பிரமுகர் எம்.சி.ரவி என்பவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக வெளியூரில் வசித்து வருவதும், அந்த வீட்டை தற்போது அதிமுக பிரமுகர் எம்.சி. ரவியின் அண்ணன் மகன் ரமேஷ் என்பவர் பயன்படுத்தி வந்ததும் விசாரணையில் தெரிய வந்தது. மேலும், ரமேஷ் மீது ஏற்கனவே ஆந்திரா மாநிலத்தில் செம்மரக்கட்டை கடத்தல் வழக்கு நிலுவையில் இருப்பது தெரிய வந்ததன் அடிப்படையில் அவரை காவல் துறையினர் தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர்.
மேலும், பறிமுதல் செய்யப்பட்ட செம்மரக்கட்டைகளை சிறப்பு புலனாய்வு காவல் துறையினர் வனத்துறை மூலம் மதிப்பீடு செய்தபோது, 106 செம்மரக்கட்டைகள் சுமார் 2 டன் என்பது உறுதியானது. இதன் மதிப்பீடு சுமார் 50 லட்சம் இருக்கலாம் என்று வனத்துறையினர் கணித்துள்ளனர். இதற்கிடையே இவ்விவகாரம் தொடர்பாக காவல் துறையினரின் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ள நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
