பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. மேலும், பாதிக்கப்பட்ட 8 பெண்களுக்கும் ஒட்டுமொத்தமாக ரூ.85 லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இதனை தொடர்ந்து பல அரசியல் கட்சி தலைவர்களும் தீர்ப்பினை பாராட்டி வரும் நிலையில், முதலமைச்சர் ஸ்டாலினுக்கும் எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ்-க்கும் இடையே பெரும் வார்த்தை போர் தொடங்கியுள்ளது.

முதலமைச்சரின் விமர்சனத்திற்கு அதிமுக கட்சியின் பொதுச்செயலாளரும் எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கடுமையாக பதிலளித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “அந்த குற்றவாளிக் கூடாரத்தை கைது செய்தது எனது அரசு. உங்களைப் போல் திமுக அனுதாபி என்பதால் காப்பாற்றத் துடிக்கவில்லை. நடுநிலையோடு CBI விசாரணைக்கு உத்தரவிட்டேன். அதற்கான நீதியே
இன்று கிடைத்துள்ளது. வழக்கம் போல உங்கள் ஸ்டிக்கரைத் தூக்கிக் கொண்டு வராதீர்கள். யார் வெட்கித் தலை குனிய வேண்டும்?.” எனப் பதிவிட்டுள்ளார்.

மேலும், “அண்ணா பல்கலைக்கழகம் பாலியல் வழக்கில் குற்றவாளி ஞானசேகரன் வீட்டில் அமர்ந்து பிரியாணி சாப்பிட்ட உங்கள் அமைச்சர் மீதும், சென்னை துணை மேயர் மீதும் விசாரணை நடத்த துப்பில்லாத நீங்கள் தான் வெட்கித் தலைகுனிய வேண்டும். #யார்_அந்த_SIR என்ற கேள்விக்கு இன்று வரை பதில் சொல்லாமல், அந்த SIR-ஐ காப்பாற்றத் துடிக்கும் நீங்கள் தான் வெட்கித் தலைகுனிய வேண்டும் எனவும் அண்ணா நகர் 10 வயது சிறுமி பாலியல் வழக்கில், CBI விசாரணைக்கு எதிராக உச்சநீதிமன்றம் வரை சென்று,
மூத்த வக்கீல்களை நியமிக்க , மக்கள் வரிப்பணத்தை ஊதாரித்தனமாக செலவழித்து, 10 வயது சிறுமிக்கும், அச்சிறுமியின் பெற்றோருக்கும் கிடைக்க வேண்டிய நீதிக்கு எதிராக வாதாடிய நீங்கள் தான் வெட்கித் தலைகுனிய வேண்டும்.” என எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.

தொடர்ந்து, “நீட் ரகசியம் என்று நீங்களும், உங்கள் மகனும் மாணவர்களை ஏமாற்றிய போதே, உங்களுக்கு வெட்கம், மானமெல்லாம் இல்லை என்பது தெரிந்துவிட்டது. இருப்பினும், கொஞ்சமாவது மனசாட்சி இருந்தால், உங்கள் ஆட்சியில் பெண்கள் வெளியிலேயே வர முடியாத அவல நிலை இருப்பதையும், நாள்தோறும் பதியப்படும் POCSO வழக்குகளையும் பார்த்து கொஞ்சமாவது வெட்கித் தலைகுனியுங்கள்.” இவ்வாறு தன்னுடைய கண்டனத்தை எடப்பாடி பழனிசாமி அவருடைய எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக தீர்ப்பினை தொடர்ந்து முதலமைச்சர் அவருடைய எக்ஸ் பக்கத்தில், “பொல்லாத அதிமுக நிர்வாகி உள்ளிட்ட குற்றவாளிகளால் நிகழ்த்தப்பட்ட பெருங்கொடுமைக்கு நீதி கிடைத்திருக்கிறது. அதிமுக குற்றவாளி அடங்கிய கூடாரத்தைப் பாதுகாக்க முயற்சித்த ‘சார்’கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்,” எனப் பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடதக்கது.

Share.
Leave A Reply

Exit mobile version