கடந்த மார்ச் மாதம் 28-ம் தேதியில் இருந்து ஏப்ரல் 15-ம் தேதி வரை தமிழ்நாட்டில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெற்றது. மொத்தம் 4 லட்சத்து 46 ஆயிரத்து 411 மாணவர்கள், 4 லட்சத்து 40 ஆயிரத்து 465 மாணவிகள், 25 ஆயிரத்து 888 தனித் தேர்வர்கள், 272 சிறை கைதிகள் என மொத்தம் 9 லட்சத்து 13 ஆயிரத்து 36 பேர் எழுதியிருந்தனர்.
இந்த தேர்வு முடிவுகளை இன்று (16.05.2025) பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட்டார். அதன்படி இத்தேர்வில் வெற்றி பெற்றவர்கள் 8 லட்சத்து 17 ஆயிரத்து 261 பேர். இது கிட்டத்தட்ட 93.80சதவீதம் ஆகும். தனித்தேர்வர்களில் சிதம்பரம் அருகே 70 வயது முதியவர் ஒருவரும் 10-ம் வகுப்பு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று அசத்தியுள்ளார்.
சிதம்பரம் அருகே கோவிலாம்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் 70 வயதான கோதண்டராமன். இவர் அதே கிராமத்தில் உள்ள அரசு ஆரம்பப் பள்ளியில் 1965-ம் ஆண்டு 5-ம் வகுப்பு வரை படித்துள்ளார். அதன் பின் சிதம்பரத்தில் உள்ள ராமசாமி செட்டியார் மேல்நிலைப் பள்ளியில் 6-ம் வகுப்பு சேர்ந்த போது, அவரது தந்தை மற்றும் தாய் இறந்துவிட படிப்பை பாதியிலேயே நிறுத்தி உள்ளார்.
பெற்றோர் மறைந்த பிறகு தாத்தா, பாட்டி கண்காணிப்பில் இருந்த அவர், பள்ளி செல்ல முடியாமல் போக, அவரது தாய் மாமன் ராஜகோபால் ரயில்வே துறையில் வேலை பார்த்து வந்துள்ளார். அவரது உதவியின் பேரில், ரயில்வே துறையில் ஒப்பந்த ஊதிய அடிப்படையில் கேங்மேன் பணியில் வேலைக்குச் சேர்ந்தார் கோதண்டராமன். அவர் முதன் முதலில் வாங்கிய சம்பளம் ரூ.4.35பைசாவாக இருந்துள்ளது.
பின்னர் 1980-ம் ஆண்டு ரயில்வே துறையில் பணி நியமன் ஆணையை பெற்றவர், அங்கேயே சுமார் 30 ஆண்டுகள் பணிபுரிந்து வந்துள்ளார். பணி ஓய்வுகுப் பிறகு சிலரைப் போல கோயில் குளம் என செல்லாமல் விட்டுப் போன படிப்பை தொடர முடிவு செய்தார் கோதண்டராமன். கடலூரில் 2002-ம் ஆண்டு 8-ம் வகுப்பு தேர்வை முடித்தவர், 2024-ம் ஆண்டு 10-ம் வகுப்பை தேர்வையும் எழுதியிருந்தார். அறிவியல் மற்றும் சமூக அறிவியல் தவிர்த்து மற்ற 3 பாடங்களில் தோல்வியடைந்தார். இருப்பினும் அதன் பின் தேர்வெழுதி தமிழ் மற்றும் கணிதத்தில் தேர்ச்சி பெற்றார். ஆங்கிலத்தில் மட்டும் தோல்வியடைந்தவர், விடாமுயற்சியாக மீண்டும் படிக்கத் தொடங்கினார்.
இந்தாண்டு நடைபெற்ற 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் சிதம்பரம் நந்தனார் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தேர்வெழுதி தேர்ச்சி பெற்றுள்ளார் கோதண்டராமன். படிப்பிற்கு வயது முதிர்வு தடங்கல் இல்லை. என்னை பார்த்து மற்ற மாணவர்கள் தேர்வு எழுத போட்டி போட்டுக் கொண்டு ஆர்வம் காட்டினர். வெற்றிக்கு எனது மகன் தான் காரணம் என நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார் கோதண்டராமன்.