எதிர்வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மதிமுக, இந்த முறை தனது செல்வாக்கை நிரூபிக்கும் வகையில் கூடுதல் தொகுதிகளைக் கோரியுள்ளது. அக்கட்சியின் சார்பில் போட்டியிட விரும்பும் 12 விருப்பத் தொகுதிகளின் பட்டியல் திமுக தலைமையிடம் வழங்கப்பட்டுள்ளது.
கடையநல்லூர், சங்கரன்கோவில், சாத்தூர், அரியலூர், சீர்காழி, திருச்சி கிழக்கு (அல்லது) மணப்பாறை, புவனகிரி, கடலூர், நெய்வேலி, ஆவடி, கும்மிடிப்பூண்டி, கோவை வடக்கு ஆகிய 12 தொகுதிகளில், தங்களுக்கு வலுவான வாக்கு வங்கி இருப்பதாகக் கருதும் 8 தொகுதிகளைக் கட்டாயமாக ஒதுக்க வேண்டும் என மதிமுக வலியுறுத்தியுள்ளது.
மேலும்,இந்த முறை தொகுதிப் பங்கீட்டில் மதிமுக இரண்டு முக்கிய நிபந்தனைகளை முன்வைத்துள்ளதாக கூறப்படுகிறது. அதாவது, கடந்த காலங்களைப் போல உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடாமல், இந்த முறை தங்களுக்கு என ஒதுக்கப்பட்ட தனிச் சின்னத்திலேயே போட்டியிடுவோம் எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.
அதாவது, கடந்த காலங்களில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டது கட்சியின் தனித்துவத்தைப் பாதிப்பதாக நிர்வாகிகள் கருதுவதால், கட்சியின் அடையாளத்தைத் தக்கவைக்க இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளதாக திமுகவினரிடம் மதிமுகவினர் கூறியுள்ளனர். துரை வைகோ அவர்கள் மக்களவைத் தேர்தலில் தீப்பெட்டிச் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, சட்டமன்றத் தேர்தலிலும் அதே போன்ற ஒரு தனிச் சின்னத்தைப் பயன்படுத்தி தங்களின் வாக்கு வங்கியை உறுதிப்படுத்த அக்கட்சித் தலைமை திட்டமிட்டுள்ளது.
இதேபோல், சட்டமன்ற இடங்களுடன் கூடுதலாக, ஒரு ராஜ்யசபா உறுப்பினர் சீட் தங்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்பதையும் ஒரு பிரதான கோரிக்கையாக வைத்துள்ளனர்.
ஏற்கனவே மதிமுகவின் பொதுச்செயலாளர் வைகோ அவர்களின் பதவிக்காலம் மற்றும் கட்சியின் எதிர்காலத் தேவையைக் கருத்தில் கொண்டு, நாடாளுமன்ற மேலவையில் பிரதிநிதித்துவம் அவசியம் என்பதை அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். சட்டமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையில் ஒருவேளை சமரசம் ஏற்பட்டால் கூட, ராஜ்யசபா சீட் விவகாரத்தில் விட்டுக் கொடுக்கக் கூடாது என்பதில் அக்கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் உறுதியாக உள்ளனர்.
200 தொகுதிகளில் தனித்துப் போட்டியிட வேண்டும் என்ற முனைப்பில் திமுக நிர்வாகிகள் உள்ள சூழலில், கூட்டணிக் கட்சிகளுக்கு அதிக இடங்களை ஒதுக்குவது குறித்த இழுபறி நீடிக்கிறது. எனினும், மதிமுகவின் கோரிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான குழு விரைவில் அடுத்தகட்டப் பேச்சுவார்த்தையை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
