கோவையில் கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் கனமழையால், செல்வபுரம், முத்துசாமி காலனி பகுதியில் உள்ள எஸ்.ஜெ.கார்டன் குடியிருப்புப் பகுதிகளை மழைநீர் சூழ்ந்துள்ளது. இதனால் வீடுகளுக்குள் தண்ணீர் புகும் அபாயம் ஏற்பட்டு, மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
நீர் வழித்தடங்களைச் சீரமைக்காததால் அவலம்:
பருவமழைக்கு முன்பாக கோவை மாவட்ட நிர்வாகம் நீர் வழித்தடங்களை முறையாகத் தூர்வாராததாலும், போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளாததாலும் இந்தப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகப் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். எஸ்.ஜெ.கார்டன் பகுதியில் மழைநீர் வெளியேற வழியின்றித் தேங்கி நிற்பதால், அப்பகுதி மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர்.
மாநகராட்சி மீது புகார்:
இதுகுறித்து மாநகராட்சி நிர்வாகத்திற்குப் பலமுறை தகவல் அளிக்கப்பட்டும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனப் பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். தேங்கியுள்ள தண்ணீரை உடனடியாக வெளியேற்றவும், இந்தப் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காணவும் மாநகராட்சி நிர்வாகம் விரைந்து செயல்பட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விரைந்து நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்: மழைக்காலம் தொடங்குவதற்கு முன்னரே உரிய திட்டமிடலுடன் செயல்பட்டிருந்தால், இத்தகைய பாதிப்புகளைத் தவிர்த்திருக்கலாம் என்றும், இனியும் காலம் தாழ்த்தாமல் மக்களைக் காக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.