சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே தனியார் விடுதியில் தங்கி 9 ஆம் வகுப்பு பயின்று வந்த மாணவி, விடுதி வளாகத்திற்குள்ளேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இளையான்குடி தாலுகா ஒச்சந்தட்டு கிராமத்தை சேர்ந்தவர் பிரான்சிஸ் இவரது மூத்த மகள் பிருந்தா. 14 வயதான இவர் ஆண்டிச்சியூரணியில் செயல்பட்டு வரும் தனியார் விடுதியில் தங்கி அங்கிருந்து 2 கி.மீ தொலைவில் சூசையப்பர்பட்டினம் கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில் 9 ஆம் வகுப்பு பயின்றுவந்துள்ளார். இன்று அதிகாலை விடுதியில் தங்கி பயின்று வரும் சக மாணவிகள் வந்து பார்த்தபோது மாணவி பிருந்தா விடுதி வளாகத்திற்குள்ளேயே மரத்தில் தூக்கிட்டபடி சடமலாக கிடந்துள்ளார்.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த விடுதி காப்பாளர்கள் உடனடியாக காளையார்கோவில் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததை தொடர்ந்து, சம்பவ இடம் சென்ற காவல்துறையினர் மாணவி பிருந்தாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மாணவியின் இந்த மரணம் குறித்து காவல்துறையினர் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். முதல்கட்டமாக விடுதியில் தங்கியிருந்தது பிடிக்காத காரணத்தால் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
