கடந்த ஆண்டு கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, அக்கட்சியின் தலைவர் விஜய் இன்று டெல்லியில் உள்ள சிபிஐ தலைமையகத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.
கடந்த செப்டம்பர் 27, 2025 அன்று கரூரில் தவெக நடத்திய மாபெரும் பொதுக்கூட்டத்தில் லட்சக்கணக்கான மக்கள் திரண்டனர். அப்போது ஏற்பட்ட பயங்கரக் கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட 41 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் குறித்து உச்சநீதிமன்ற உத்தரவின்படி சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
ஏற்கனவே ஜனவரி மாதம் இரண்டு முறை விசாரணைக்கு ஆஜரான நிலையில், தமிழக சட்டமன்றத் தேர்தல் பணிகள் இருப்பதால், இந்த விசாரணையை 15 நாட்கள் தள்ளிவைக்க வேண்டும் என்றும் அல்லது காணொலி காட்சி மூலமாகவோ அல்லது சென்னையில் உள்ள அலுவலகத்திலோ விசாரணை நடத்த வேண்டும் என்றும் விஜய் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், இதனை நிராகரித்த சிபிஐ, டெல்லி அலுவலகத்தில் இன்று நேரில் ஆஜராக வேண்டும் எனத் திட்டவட்டமாக உத்தரவிட்டது.
இதனைத் தொடர்ந்து, நேற்று மாலை தனி விமானம் மூலம் டெல்லி சென்ற விஜய், இன்று காலை சிபிஐ அதிகாரிகள் முன்னிலையில் ஆஜரானார். அதாவது, இன்று காலை 9 மணி அளவில் டெல்லி சிபிஐ அலுவலகத்திற்கு சென்ற விஜய்யிடம், ஒரு மணி நேரத்திற்கும் மேல் எந்த விசாரணையும் நடத்தாமல் அவரை அமர வைத்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.
கையெழுத்து மட்டும் வாங்கி வைத்துக் கொண்டு விசாரணை எதுவும் நடக்காமல் அவரை அமர வைத்திருந்ததாகவும் அதன்பின் அவரிடம் விசாரணையை நடத்தியதாகவும் கூறப்படுகிறது. அந்தவகையில் 2 மணி நேரத்திற்கு மேல் விஜய்யிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தியதாகவும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தேர்தல் தேதி அறிவிக்கப்படும் நாளில் விஜய்யை காக்க வைத்தது அரசியல் நெருங்கடி காரணமா எனவும் கேள்வி எழுந்து வருகிறது.
