தமிழகத்தில் அக்னி வெயில் தொடங்குவதற்கு முன்னரே வெயில் சதத்தைக் கடந்து வாட்டி வதைக்கத் தொடங்கியுள்ள நிலையில், ஏசி மற்றும் ஏர் கூலர்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது சாமானிய மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. வழக்கமாக வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க நடுத்தர மக்கள் ஏர் கூலர்களைத் தேர்ந்தெடுப்பார்கள். ஆனால், தற்போது சர்வதேச சந்தையில் பிளாஸ்டிக் மற்றும் ரசாயனப் பொருட்களின் விலை அதிகரித்துள்ளதால், ஏர் கூலர்களின் உற்பத்திச் செலவு 30 முதல் 40 சதவீதம் வரை உயர்ந்துள்ளதாக முன்னணி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இதன் காரணமாக, ஒரு கூலரின் விலை கடந்த ஆண்டை விட ரூ.15,000 வரை உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மினி கூலர்கள் ரூ.499 முதல் ரூ.2,000 வரையிலும், பெரிய வகை டெசர்ட் கூலர்கள் ரூ.15,000 வரையிலும் விற்பனை செய்யப்படுகின்றன. ஏர் கூலர்கள் மட்டுமல்லாது, ஏசி இயந்திரங்களின் விலையும் தப்பிக்கவில்லை. தாமிரத்தின் விலை உயர்வு மற்றும் அரசு அமல்படுத்தியுள்ள புதிய மின் சேமிப்பு விதிகள் காரணமாக வோல்டாஸ், டைகின் போன்ற முன்னணி பிராண்டுகளின் ஏசி விலைகள் 10 முதல் 15 சதவீதம் வரை அதிகரித்துள்ளன. கோடை காலத்தைச் சமாளிக்கத் திட்டமிட்டிருந்த நடுத்தரக் குடும்பங்களின் பட்ஜெட்டை இந்த திடீர் விலையேற்றம் நிலைகுலையச் செய்துள்ளது.

வெயிலின் கொடுமை ஒருபுறம், விலைவாசி உயர்வு மறுபுறம் என மக்கள் இரட்டைத் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர். புதிய ஸ்டாக் வரும்போது விலையேற்றம் இன்னும் அதிகமாக இருக்கும் என்பதால், தற்போது பல கடைகளில் பழைய விலையில் கையிருப்பில் உள்ள சாதனங்களை வாங்க மக்கள் இப்போதே ஆர்வம் காட்டி வருகின்றனர். வெயில் காலம் தீவிரமடைவதற்கு முன்பே குளிர்சாதனப் பொருட்களின் சந்தை சூடுபிடித்துள்ள நிலையில், தேவையைக் கருத்தில் கொண்டு தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றன.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version