ல்லாவரம் ஏரி மற்றும் ரேடியல் சாலைப் பகுதிகளில் சுமார் 5 டன் அளவிற்கு ஆபத்தான மருத்துவக் கழிவுகளைக் கொட்டிய தனியார் மருத்துவமனைகள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2024-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பல்லாவரம் ஏரி, பல்லாவரம் ரேடியல் சாலை உள்ளிட்ட பகுதிகளில் டன் கணக்கில் மருத்துவ மற்றும் உயிரியல் கழிவுகள் (Bio-medical wastes) கொட்டப்பட்டு சுற்றுச்சூழல் கடுமையாகப் பாதிக்கப்பட்டது குறித்து நாளிதழ்களில் செய்திகள் வெளியாகின. இந்தச் செய்தியின் அடிப்படையில், தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் (NGT) தாமாக முன்வந்து (Suo Motu) இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.

லட்சக்கணக்கில் அபராதம் விதிக்கப் பரிந்துரை

இந்த விவகாரம் தொடர்பாக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் தாம்பரம் மாநகராட்சி தரப்பில் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில், விதிகளை மீறிய மருத்துவமனைகளுக்குப் பலத்த அபராதம் விதிக்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது:

மியாட் (MIOT) மருத்துவமனை

மணப்பாக்கத்தில் உள்ள இந்தத் தனியார் மருத்துவமனைக்கு ₹55,25,625 (55 லட்சத்து 25 ஆயிரத்து 625 ரூபாய்) அபராதம் விதிக்கப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

ஜெம் (GEM) மருத்துவமனை

இந்த மருத்துவமனை நிர்வாகத்திற்கு ₹28,78,750 (28 லட்சத்து 78 ஆயிரத்து 750 ரூபாய்) அபராதம் விதிக்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதேபோல், விதிகளை மீறியதற்காகத் தாம்பரம் மாநகராட்சி தரப்பிலும் ₹5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகப் பசுமைத் தீர்ப்பாயத்தில் தெரிவிக்கப்பட்டது.

பசுமைத் தீர்ப்பாயத்தின் அதிரடி உத்தரவு

இவ்வழக்கை விசாரித்த தென்மண்டல பசுமைத் தீர்ப்பாய நீதித்துறை உறுப்பினர் நீதிபதி புஷ்பா சத்திய நாராயணா மற்றும் நிபுணத்துவ உறுப்பினர் பிரசாந்த் குமார் கர்ஹவா ஆகியோர் அடங்கிய அமர்வு தற்போது முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.

“பல்லாவரம் ஏரிப் பகுதியில் விதிகளை மீறி மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டிருப்பது விசாரணையில் தெளிவாக உறுதியாகியுள்ளது. மருத்துவக் கழிவுகளை முறையாகப் பிரித்து மேலாண்மை செய்யத் தவறியதற்காக மியாட் மருத்துவமனை மற்றும் ஜெம் மருத்துவமனை ஆகிய நிர்வாகங்கள் மீதும், அவற்றிடமிருந்து கழிவுகளைச் சேகரித்த ‘அசோக் பேப்பர் மார்ட்’ நிறுவன உரிமையாளர்கள் மீதும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் விரிவான விசாரணை நடத்த வேண்டும்.

மேலும், இந்தச் சட்டவிரோதச் செயலில் ஈடுபட்டு சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்திய நிறுவனங்கள் மற்றும் நபர்கள் மீது சட்டப்படியான கடுமையான நடவடிக்கைகளை உறுதி செய்ய வேண்டும்” என்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திற்குத் தீர்ப்பாயம் தன் உத்தரவில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version