சமீபத்தில் இந்திய ஜனநாயகக் கட்சியின் மாநில இணைப் பொதுச் செயலாளராகப் பணியாற்றிய லாட்டரி அதிபர் மார்ட்டினின் மனைவியும், தவெகவின் முக்கிய நிர்வாகி ஆதவ் அர்ஜுனாவின் மாமியாருமான லீமா ரோஸ் அக்கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார்.
லாட்டரி அதிபர் மார்ட்டினின் மனைவி லீமா ரோஸ். இவர் இந்திய ஜனநாயக கட்சியின் இணைப் பொதுச் செயலாளராக இருந்துவந்தார். இந்நிலையில், கடந்த 9ஆம் தேதி திடீரென ஐ.ஜே.கே.வில் இருந்து விலகுவதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இதற்கு முன்னதாக இவர் கடந்த ஜனவரி மாதம் 9ஆம் தேதி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்திருந்தார்.
அப்போதே லீமா ரோஸ், அதிமுகவில் இணையப்போகிறார் எனும் தகவல்கள் வந்தன. ஆனால், அதனை அவர் மறுத்துவந்த நிலையில், கடந்த 9ஆம் தேதி ஐ.ஜே.கே.வில் இருந்து விலகுவதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டார். மேலும் அந்த அறிக்கையில், கட்சியின் மீது அதிருப்தியை தெரிவித்திருந்தார்.

அந்த அறிக்கையில் அவர், நேரம் காலம் பார்க்காமல் நான் உழைத்தேன். கட்சி, என் உழைப்பை அங்கீகரிக்கவில்லை என்பதும் சமீப காலமாக எனது உழைப்பை உதாசீனப்படுத்தியதும் எனக்கு மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. அதேபோன்று பெண்கள் அரசியலுக்கு வர வேண்டும், பொதுவாழ்வில் துணிச்சலோடும் தைரியத்துடனும் செயல்பட வேண்டும் என்று நான் செல்லும் இடம் எங்கிலும் சந்திக்கும் பெண்களை ஊக்கப்படுத்தி வந்திருக்கிறேன். இதுபோன்ற சூழலில் இக்கட்சி ஒரு பெண்ணுக்கு அங்கீகாரம் வழங்காதது பெரும் ஏமாற்றமே. உழைப்புக்கேற்ற அங்கீகாரத்தை கட்சியின் தொண்டர்களான, நமது சமூக சொந்தங்களை விட்டு பிரிய மனமில்லாமல் என்னுடைய அதிருப்தியை வெளிப்படுத்தி 8 மாத காலம் காத்திருந்தேன்.
கட்சித் தலைமையில் இருந்து எந்த ஒரு முறையான பதிலும் வராத காரணத்தினாலும், சில சமீபகால கசப்பான அனுபவங்களின் அடிப்படையிலும் இந்திய ஜனநாயக கட்சியில் இருந்து விலகும் முடிவை எடுக்க நான் தள்ளப்பட்டுள்ளேன் என தெரிவித்திருந்தார்.
இந்தச் சூழலில்தான் இன்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து அக்கட்சியில் தன்னை லீமா ரோஸ் இணைத்துக்கொண்டுள்ளார். முன்னதாக மு.க. அழகிரியின் தீவிர ஆதரவாளராக இருந்துவந்த எம்.பி. மன்னன், சென்னை பசுமை வழி சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் அவரைச் சந்தித்து அக்கட்சியில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
