2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் ஜனவரி 9ம் தேதி முதல் நேர்காணல் நடத்தப்படும் என்று பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் சட்டமன்ற தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறது.
அந்தவகையில், திமுக சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. அதிமுகவிலும், விருப்பமனு விநியோகம் செய்யப்பட்டுள்ளது, இந்தநிலையில் அதிமுக ஜன.9ம் தேதி வேட்பாளர் நேர்காணலை தொடங்கவுள்ளது. சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் 13ம் தேதி வரை நேர்காணல் நடக்க உள்ளது. சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட 10,175 பேர் விருப்ப மனு அளித்துள்ளனர் குறிப்பிடத்தக்கது.
வரும் 9ம் தேதி கோவை, நீலகிரி, திருப்பூர், நாமக்கல், சேலம், ஈரோடு, கரூர், திண்டுக்கல்; 10ம் தேதி கன்னியாகுமரி, தஞ்சை, சிவகங்கை, ராமநாதபுரம், நெல்லை, விருதுநகர், திருவாரூர், மதுரை, தேனி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களுக்கு நேர்காணல் நடைபெறும்.
இதையடுத்து, 11ம் தேதி விருதுநகர், கடலுார், நாகை, மயிலாடுதுறை, திருச்சி, பெரம்பலுார், அரியலுார், கிருஷ்ணகிரி, தர்மபுரி; 12ம் தேதி விழுப்புரம், கள்ளக்குறிச்சி, துாத்துக்குடி, தென்காசி, திருவண்ணாமலை, வேலுார், ராணிப்பேட்டை, திருப்பத்துார்; 13ம் தேதி திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை மற்றும் புதுச்சேரி, கேரளத்தை சேர்ந்தவர்களிடம் நேர்காணல் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது,
