தமிழகத்தில் நிலவும் பரபரப்பான அரசியல் சூழ்நிலைக்கு மத்தியில், உள்துறை அமைச்சர் அமித்ஷா வரும் 15ம் தேதி தமிழகம் வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சட்டசபை தேர்தலுக்கு, இன்னும் நான்கு மாதங்களே உள்ள நிலையில் தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. இதற்காக தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியை பலப்படுத்த, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார். அதன் ஒருபகுதியாக தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு கூட்டணி தொடர்பாக முடிவெடுக்க தீவிரம் காட்டி வருகிறார்.
இந்தநிலையில், வருகின்ற 15ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் தமிழகம் வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது குறிப்பாக சென்னை மற்றும் வேலூர் மாவட்டங்களில் நடைபெறக்கூடிய நிகழ்வுகளில் பங்கேற்க உள்ளதாக பாஜக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும், கூட்டணி விரிவாக்கம் தேர்தல் பணிகள் தொடர்பாக பா.ஜ.க. நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்துவார் என தகவல் வெளியாகி உள்ளது.
மேலும், பாமகவில் நிலவும் தந்தை – மகன் இடையேயான பிரச்சனையை சரிசெய்ய ராமதாஸிடம் அமித்ஷா பேச்சுவார்த்தை நடத்தலாம் என்றும் பின்னர் பாமக – தேமுதிகவை ஒருங்கிணைத்து கூட்டணியில் சேர்க்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இதுமட்டுமல்லாமல், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசியது குறித்து நயினார் நாகேந்திரனும் அமித்ஷாவிடம் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
