தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுக கூட்டணியும், ஆட்சியை பிடிப்பதற்கு அதிமுக – பாஜக கூட்டணியும் தீவிரம் காட்டி வருகிறார்கள். நாம் தமிழர், தவெக கட்சிகளும் களத்தில் வேகம் காட்டி வருகிறார்கள். திமுக மண்டல வாரியாக இளைஞரணி, மகளிரணி, வாக்குச்சாவடி முகவர்கள் மாநாடுகளை நடத்தி வருகிறார்கள்.

அதிமுக கோட்டையாக விளங்கும் கொங்கு மண்டலத்தில் ஏற்கனவே திமுக மகளிரணி மாநாட்டை நடத்திவிட்டனர். அதனுடன் பல்வேறு திட்டங்களை வகுத்து வருகிறார்கள். திமுகவுக்கு கடந்த காலங்களில் கொங்கு மண்டலம் சாதகமாக இருந்ததில்லை. இந்தமுறை செந்தில் பாலாஜியை திமுக மேற்கு மண்டல தளபதியாக களமிறக்கியுள்ளனர்.

அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தவெகவில் இணைந்த பிறகு அந்தக் கட்சியினரும் கொங்கு மண்டலத்தில் கவனம் செலுத்தி வருகிறார்கள். இந்தநிலையில், கோவையில் திமுக மாநாடுகளை நடத்தும் பணியில் செந்தில் பாலாஜி தீவிரமாக இறங்கியுள்ளாராம்.

அதாவது, அதன்படி வருகிற பிப்ரவரி 22 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) திமுக மேற்கு மண்டல இளைஞரணி மாநாடு கருமத்தம்பட்டி கணியூர் டோல்கேட் அருகே நடைபெறுகிறது. இதில் துணை முதலமைச்சரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.

அன்றைய தினம் பொள்ளாச்சி பேருந்து நிலையம் திறப்பு உள்ளிட்ட அரசு நிகழ்ச்சிகளுக்கும் திட்டமிட்டுள்ளனர். அதே வாரம் பிப்ரவரி 27 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) திமுக மேற்கு மண்டல வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி மாநாடு எல் அண்ட் டி பைபாஸ் செட்டிப்பாளையம் பகுதியில் நடைபெறவுள்ளது. இதில் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் கலந்துகொள்ள இருக்கிறார்.

இப்படி இருக்கையில் செந்தில் பாலாஜி ஆதரவாளர்களுக்கும் – இதர திமுகவினருக்கும் இடையே கடும் மோதல் நிலவுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது, 2026 தேர்தலில் கொங்கு மண்டலத்தை குறிவைத்திருக்கும் திமுக தலைமைக்கு புதிய சிக்கலை கொடுத்துள்ளதாம்.இதனால் உட்கட்சி மோதலை விரைந்து சரிசெய்யுமாறு கட்சி தலைமை செந்தில் பாலாஜிக்கு உத்தரவிட்டுள்ளதாம்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version