அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட ஞானசேகரன் யார், யாரிடம் பேசினார் என்பது தொடர்பான ஆதாரங்கள் இருப்பதாக கூறியது குறித்து தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலையிடம் விசாரணை நடத்தக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை, ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட ஞானசேகரன் யார், யாரிடம் தொலைபேசியில் பேசினார் என்ற ஆதாரம் தன்னிடம் உள்ளதாக தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இது தொடர்பாக அண்ணாமலையிடம் விசாரணை நடத்தக்கோரி வழக்கறிஞர் எம்.எல்.ரவி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
அதில், ஞானசேகரன் யார், யாரிடம் பேசினார் என்ற தொலைபேசி உரையாடல் தொடர்பான ஆவணங்கள் தன்னிடம் இருப்பதாக கூறிய அண்ணாமலை அதனை வழக்கை விசாரித்த சிறப்பு புலனாய்வுக் குழுவிடம் வழங்கவில்லை என மனுவில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அண்ணாமலையிடம் விசாரணை நடத்துமாறு சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு கோரிக்கை மனு அணுப்பியதாகவும் ஆனால் அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை மனுவில் கூறப்பட்டுள்ளது.
எனவே, இது தொடர்பாக அண்ணாமலையிடம் விசாரணை நடத்த உத்தரவிட வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.