ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் உள்ள 27 பேரையும் ஜூன் 30 ம் தேதி நேரில் ஆஜர்படுத்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த 2024 ஆண்டு ஜூலை 5 ம் தேதி படுகொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் நாகேந்திரன், அவரின் மகன் அசுவத்தாமன், பொன்னை பாலு, உள்ளிட்ட 27 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள இந்த வழக்கில் ஏற்கனவே வழக்கு தொடர்பான ஆவணங்கள் அனைத்தும் குற்றம் சாட்டப்பட்ட 27 பேருக்கும் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த வழக்கு சென்னை அமர்வு நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது அப்போது, நாகேந்திரன், அசுவத்தாமன் உள்ளிட்ட 27 பேர் சிறையில் இருந்தவாறு காணொலி மூலம் ஆஜராகி இருந்தனர்.
இதனிடையே இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சிலர் தங்களை இந்த வழக்கில் இருந்து விடுவிக்க கோரி ஏற்கனவே மனுத்தாக்கல் செய்திருந்த நிலையில் இன்று மேலும் சிலர் மனுத்தாக்கல் செய்தனர். மேலும் சிலர் விடுவிக்க கோரி மனுத்தாக்கல் செய்ய இருப்பதாகவும் அதற்கு கால அவகாசம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
இதையடுத்து அனுமதியளித்து கால அவகாசம் வழங்கிய நீதிபதி, அடுத்த விசாரணையின் போது குற்றம் சாட்டப்பட்ட 27 பேரையும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்த காவல்துறைக்கு உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஜூன் 30 ம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார்.