ராணிப்பேட்டையில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில் முதியவர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறை விளக்கமளித்துள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் சாத்தூர் ஊராட்சியில் நேற்று நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மனு அளிக்க வந்த முதியவரை போலீசார் தாக்கியதாக வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானது. போலீசாருக்கு எதிராக அரசியல் தலைவர்கள் பலரும் தங்களது எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். இந்த நிலையில்,
காவல்துறை சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்த முகாமில் கலந்து கொண்ட சாத்தூர் கிராம நிர்வாக அலுவலரிடம் சாத்தூர் கிராமத்தை சேர்ந்த வெங்கடபதி (வ/65) என்பவர் மனு சம்மந்தமாக வாக்குவாதம் செய்து திடீரென கிராம நிர்வாக அலுவலரை கையால் தாக்கியதுடன், அரசு பணியை மேற்கொள்ள விடாமல் தடுத்ததும் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பான காணொளி பொது வெளியில் பகிரப்பட்டுள்ளது.
இது சம்பந்தமாக அங்கு பணியிலிருந்த உதவி ஆய்வாளர் பிரபாகரன் என்பவர் பிரச்சினை மேலும் தீவிரமடையாமல் தடுக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொண்டார். இதன் தொடர்ச்சியாக அவரை வெளியேற்றும் நோக்கில் உதவி ஆய்வாளர் குறைந்த அளவு பலத்தை பயன்படுத்தி சம்பவம் இடத்திலிருந்த அரசு அழியரை பணி செய்ய விடாமல் தடுத்த வெங்கடபதியை அமைதிப்படுத்தி அனுப்பியதாக தெரியவருகிறது. இச்சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இச்சம்பவத்தின் முழு காணொளியிலிருந்து, உதவி ஆய்வாளர் மற்றும் வெங்கடபதிக்கு இடையிலான நிகழ்வின் ஒரு பகுதியை மட்டுமே சமூக ஊடகங்களில் மிகைப்படுத்தி பரப்பி வருகின்றனர். பொதுமக்கள் இவ்வாறு பரப்பப்படும் மிகைப்படுத்தப்பட்ட செய்திகளை நம்ப வேண்டாம்” என கேட்டுக் கொள்ளப்படுவதாக கூறப்பட்டுள்ளது.