7.5% இட ஒதுக்கீட்டுக்காக போராடிய ஆதாரத்தை திமுக காட்ட முடியுமா என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆவேசமாக பேசியுள்ளார்.
தமிழக சட்டப்பேரவையின் இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் பிப்ரவரி 20-ம் தேதி வரை நடைபெறும் என்று சபாநாயகர் அப்பாவு நேற்று அறிவித்திருந்தார், 2026-27-ம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அலுவல் ஆய்வு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட் மீதான விவாதம், இன்று நடைபெற்றது. இதையடுத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கான கேள்விக்கான விடைகள் அளிக்கப்பட்டது. அப்போது பேசிய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், 7.5% இட ஒதுக்கீடு கொண்டு வர வலியுறுத்தி ஆளுநர் மாளிகை முன்பு திமுக போராட்டம் நடத்தியதாக குறிப்பிட்டு பேசினார்.
இதற்கு ஆத்திரமடைந்த அதிமுகவினர், 7.5% இட ஒதுக்கீட்டை தாங்கள் தான் கொண்டுவந்தோம் என்றும் கூறி கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர். அப்போது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, விளம்பரம் தேடும் செயலில் தமிழக அரசு ஈடுபடுவதாகவும், 7.5% இட ஒதுக்கீட்டுக்காக போராடிய ஆதாரத்தை திமுக காட்ட முடியுமா என்று ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.
