நாங்கள் வைத்தது தான் சட்டம் என்ற அடிப்படையில் காவல்துறையினர் செயல்பட, இது என்ன போலீஸ் ராஜ்யமா? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.
பாலியல் வன்கொடுமை வழக்கில் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வாக்குமூலம் பதிவு செய்ய உத்தரவிடக்கோரி பாதிக்கப்பட்ட பெண் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வேல்முருகன், வாக்குமூலம் பதிவு செய்ய வேண்டிய சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட்டை நேரில் ஆஜராகும்படி உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி மாலை 4 மணிக்கு நேரில் ஆஜரான சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட்டை பார்த்து நீதிபதி வேல்முருகன், பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலத்தை ஏன் பதிவு செய்யவில்லை, பதிவு செய்வதில் என்ன சிக்கல் உள்ளது என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த மாஜிஸ்திரேட், சம்மன் அனுப்பிய போதிலும் அதை காவல்துறையினர் திருப்பி அளித்து விட்டதாக தெரிவித்தார்.
இதையடுத்து, உங்கள் மோசடிக்கு நீதிமன்றத்தையும் உடந்தை ஆக்குவதா என காவல்துறைக்கு கண்டனம் தெரிவித்த நீதிபதி, வாக்குமூலம் பதிவு செய்ய வந்த பாதிக்கப்பட்டவரை ஏன் துன்புறுத்துகிறீர்கள்? குற்றவாளிகளை கூட இவ்வளவு துன்புறுத்தியதில்லை என குறிப்பிட்டார்.
குறிப்பிட்ட மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தான் வாக்குமூலம் பதிவு செய்ய வேண்டும் என எந்த சட்டத்தில் கூறப்பட்டுள்ளது என காவல்துறைக்கு கேள்வி எழுப்பிய நீதிபதி, மன உளைச்சலில் வரும் பாதிக்கப்பட்டவர்களை அருவருக்கத்தக்க வகையில் நடத்தும் காவல்துறையினர், சட்டத்தில் உள்ளதை செய்ய மறுத்து தெனாவெட்டாக செயல்படுவதாகவும் கண்டனம் தெரிவித்தார்.
சட்டத்தின்படி செயல்படாமல் நாங்கள் வைத்ததுதான் சட்டம் என்ற அடிப்படையில் காவல்துறையினர் செயல்படுவதாக குறிப்பிட்ட நீதிபதி, இது என்ன போலீஸ் ராஜ்யமா எனவும் கேள்வி எழுப்பினார்.
அரசும் காவல் துறைக்கு ஆதரவாக இருப்பது துரதிருஷ்டம் என குறிப்பிட்ட நீதிபதி, இதுபோல் செயல்படும் காவல்துறை அதிகாரியை பணி நீக்கம் செய்து உத்தரவிடப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.
பின்னர் வாக்குமூலம் பதிவுக்காக பாதிக்கப்பட்ட பெண்ணை சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்த காவல் துறைக்கு நீதிபதி வேல்முருகன் உத்தரவிட்டார்.